புல்டோசர் மாடல் கலாசாரம் தமிழ்நாட்டிலும் பரவுகிறதா? நாகர்கோவிலில் பதைபதைக்க வைத்த சம்பவம்!
குமரி: நாகர்கோவில் அருகே நள்ளிரவு கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய 35 பேர் கும்பல் உணவகம் ஒன்றை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புல்டோசர் மாடல் கலசாரம் தமிழ்நாட்டிற்குள்ளும் பரவ ஆரம்பித்துவிட்டதா? என அச்சம் தெரிவித்த மக்கள், இதுபோன்ற செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. கொலை நடக்காத நாளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், பொது இடங்களில் நடைபெறக்கூடிய சில மோதல் சம்பவங்களும் மக்களை அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது.

ஜேசிபியை கொண்டு இடித்து தரைமட்டம்
இந்த சூழலில்தான், நாகர்கோவிலில் நடைபெற்ற ஒரு சம்பவம் பதை பதைக்க வைப்பதாக அமைந்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி ஒன்றில் அமைந்து இருக்கும் ஹோட்டல் ஒன்றை மர்ம கும்பல் ஜேசிபி கொண்டு இடித்து தரை மட்டமாக்கியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி தற்போது அதிரவைத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு கூறியதாவது:- திங்கட்கிழமை இரவு ஒரு 30 முதல் 35 பேர் அரிவாளோடு வந்தார்கள். ஒரு ஜேசிபி வண்டி. ஒரு கார்.. ஒரு பெரிய வேன்.. அரிவாளோடு வந்து இறங்கினார்கள். அப்போது கடையில் பசங்க சிலர் படுத்து இருந்தார்கள். அவர்களை கத்தி, அரிவாளை காட்டி மிரட்டி இருக்க வைத்துவிட்டு, ஜேசிபியை வைத்து கடையை இடித்து தரைமட்டம் ஆக்கினார்கள்.
போலீசார் விசாரணை
பிறகு உள்ளே வந்து கண்காணிப்பு கேமிராக்கள் எல்லாத்தையும் அடித்து உடைத்தார்கள். பின்னர் லாக்கரில் இருந்து ரூபாய், பணம் எல்லாத்தையும் எடுத்துட்டாங்க.. ஒரு 20 லட்சம் ரூபாய் இதனால் எங்களுக்கு நஷ்டம். ஒரு பையனோட சத்தம் கேட்டுச்சு.. ஊர் காரங்க வாரங்க என்று.. அதை கேட்டதும் உடனே அவங்க எல்லாரும் ஓடிவிட்டாங்க.. எஸ்பி ஆபிஸ் மற்றும் ஸ்டேஷனில் புகார் அளித்து இருக்கிறோம். நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்" என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா? அல்லது கொள்ளையர்கள் கைவரிசையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
புல்டோசர் மாடல் கலாசாரம்
இதற்கிடையே, தமிழ்நாட்டில் இதுநாள் வரையில்லாத வகையில் புல்டோசர் கொண்டு வந்து ஹோட்டல் தரைமட்டம் ஆக்கப்பட்டு பணத்தை மர்ம கும்பல் அள்ளிச்சென்றது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட மாநிலங்களில் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் பரவிய புல்டோசர் மாடல் கலாசாரம் தமிழகத்திற்குள்ளு நுழைந்துவிட்டதா? என்ற கேள்வியை எழுப்பும் விதமாக நடக்கும் நிகழ்வுக்ளை பார்த்தால் உள்ளது என்று பொதுமக்கள் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.
சிசிடிவி காட்சிகள்
இது ஒருபக்கம் இருக்க ஹோட்டலை இடிக்க புல்டோசருடன் வந்த மர்ம கும்பல் செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. டெம்போ வேன் ஒன்றில் இருந்து 10 க்கும் மேற்பட்டர்கள் முகமுடி அணிந்த படி இறங்குவதும், பின்னர் ஹோட்டலை இடித்துவிட்டு வேக வேகமாக சாலையில் ஓடுவதும், புல்டோசரும் அதிவேகத்தில் செல்லும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்களை முளையிலே கிள்ளி எறிய வேண்டும் என்று போலீசார் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
