கன்னியாகுமரி பெண்களுக்கு லைசென்ஸ் இருந்தாலே மின்சார ஆட்டோ.. 2 ஏக்கர் விவசாய நிலம்.. கடன் உதவிகள்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள் மூலம் ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ வாங்குவதற்கு ரூ.3 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்காக விண்ணப்பதாரர் 25 வயது நிரம்பியவராகவும் 45 வயதுக்கு உட்பட்டும் இருக்க வேண்டும் என கலெக்டர் அழகு மீனா அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள் மூலம் ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ வாங்குவதற்கு ரூ.3 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது.

இதற்காக விண்ணப்பதாரர் 25 வயது நிரம்பியவராகவும் 45 வயதுக்கு உட்பட்டும் இருக்க வேண்டும். கடனை திருப்பி செலுத்தும் காலம் 3 ஆண்டுகள் ஆகும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 10 சதவீதம். தகுதியுடையவர்கள் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரிடம் இருந்து பெறப்பட்ட விலைபடிவ பட்டியல், பான்கார்டு, ஆதார்கார்டு, ரேஷன் கார்டு, கடன் உறுதி ஆவணம் மற்றும் வங்கி கோரும் உரிய ஆவணங்களுடன் தங்களுக்கு அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளர்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
2 ஏக்கர் விவசாய நிலம்
இதுபோல் கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள் மூலம் நிலமற்ற ஏழை எளிய பெண் விவசாயத் தொழிலாளர்கள் 2 ஏக்கர் வரை விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது. கடனை திருப்பி செலுத்தும் காலம் 5 ஆண்டுகள் ஆகும். சொத்தின் மதிப்பில் 65 சதவீதம் வரை அதிகபட்சம் ரூ.5 லட்சம் (2 ஏக்கர் வரை மட்டுமே) வழங்கப்படும். வட்டி விகிதம் ஆண்டிக்கு 10 சதவீதம் ஆகும்.
தகுதியுடைய ஏழை பெண் விவசாயத் தொழிலாளர்கள் கடன் விண்ணப்பத்துடன் தங்களுக்கு அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளர்களை தொடர்பு கொள்ளலாம்.
சுய உதவிக்குழுக்கள்
மேலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டுப்பொறுப்பு குழுக்கள் மூலம் விவசாயிகளின் விளை பொருட்களைச் சேமித்துப் பதப்படுத்தவும், மதிப்புக் கூட்டி விற்பனை செய்யவும் ஏதுவாகக் கடனுதவியாக திட்ட செலவில் 90 சதவீதம் தொகை அல்லது அதிகபட்சமாக ரூ.25 லட்சம் அளவில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கடன் பெறுவதற்கான தகுதிகளாக செயல் திட்டத்தின் குறைந்த பட்ச மூலதனம் ரூ.5 லட்சமாக இருக்க வேண்டும். தகுதியுடையவர்கள் தகுந்த ஆவணங்களுடன் தங்களுக்கு அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளர்களை தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications