இப்பவும் அரசியல் தான் செய்றாரு.. வேங்கைவயல் + நாங்குநேரி.. மொத்தமா ‘சைலன்ட்’.. அண்ணாமலை அட்டாக்!
கன்னியாகுமரி: வேங்கைவயல் மற்றும் நாங்குநேரி விவகாரத்தில் பல கட்சியினர் மவுன விரதத்தில் உள்ளனர். வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் 240க்கு நாட்களுக்கு மேலாகியும் இனும் ஒருவரைக் கூட கைது செய்யவில்லை எனச் சாடியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
2024 லோக்சபா தேர்தலை முன்னிட்டு 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபயணத்தை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் இன்று சுதந்திர தினத்தையொட்டி கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டப வளாகத்தில் உள்ள பாரதமாதா சிலைக்கு அண்ணாமலை இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "வேங்கைவயல் மற்றும் நாங்குநேரி விவகாரங்களில் பல கட்சியினர் மவுன விரதத்தில் உள்ளனர். திருமாவளவன், இது ஆர்.எஸ்.எஸ் சதி என்கிறார். சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை. எங்கே எது நடந்தாலும் இது ஆர்.எஸ்.எஸ் சதி என ஒரே டயலாக்கை வைத்திருக்கிறார் திருமாவளவன்.
அந்த அளவுக்கு அரசியல் கட்சியின் நிலை இருக்கிறது. இதன் மூலம் அவர்களின் சந்தர்ப்பவாத அரசியல் சாயம் வெளுத்துவிட்டது. வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் 240க்கு நாட்களுக்கு மேலாகியும் இனும் ஒருவரைக் கூட கைது செய்யவில்லை. ஊரில் எல்லாரிடமும் டிஎன்ஏ சோதனை எடுத்தார்கள் என்ன ஆனது?
நாங்குநேரியில் பள்ளியில் சாதியால் மோதல் நடந்து, வீட்டுக்குப் போய் கொடூரமான தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், முதலமைச்சர் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார். முதலமைச்சர் ஆனபிறகும் எதிர்க்கட்சித் தலைவரைப் போல அரசியல் செய்துகொண்டு இருக்கிறார். இன்னும் முதலமைச்சர் ஸ்டாலின் வன்மத்தைத் தூண்டுகிறார். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே விரோத போக்கை கடைபிடிக்கிறார். ஆட்சியில் இருக்கும் மனிதருக்கு இது அழகா?" எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அண்ணாமலை, "எல்லா தரப்பு மக்களும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படித்து வருகிறார்கள். புள்ளிவிவரங்களை திமுக வெளியிட்டு நீட் யாருக்கு எதிரானது என்பதை விளக்க வேண்டும். ஆளும்கட்சியாக திமுக வந்த பிறகும் முதல்வர் இதனை வைத்து அரசியல் செய்கிறார். இதனால் மாணவர்களின் தன்னம்பிக்கை பாதிக்கப்படுகிறது. ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக எதிர்க்கட்சி போல் நடக்கலாமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications