போன வாரம் அண்ணாமலை! இந்த வாரம் நாகர்கோவில் காந்தி! தேவையா இந்த ''டயர் ட்யூப்' நாடகம்?
கன்னியாகுமரி: நாகர்கோவில் தொகுதி பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடத்திய மீட்புப்பணி சமூக வலைதளங்களில் கிண்டலுக்குள்ளாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ரயில்வே தண்டவாளத்தின் மீது கூட தண்ணீர் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆசியாவின் மிகப்பெரிய தொட்டி பாலம் மீது தண்ணீர் நிரம்பி கீழே வடிந்து கொண்டிருக்கிறது.
Recommended Video
பல கிராமங்களும், பிற ஊர்களில் இருந்து வெள்ள நீர் காரணமாக துண்டிக்கப்பட்டு இருக்கின்றன. சென்னையில் வெள்ள பாதிப்பு குறைந்துள்ள நிலையில் தற்போது அரசு அதிகாரிகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விரைந்து இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் பல்வேறு கட்சியினரும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வேட்டியை மடித்துக் கட்டி
அதே நேரம் நாகர்கோவில் தொகுதி பாஜக எம்எல்ஏ காந்தி செய்த மீட்புப்பணி வீடியோ ஒன்று, சர்ச்சைகளுக்கு காரணமாகியுள்ளது. முட்டிக்கு மேலே தண்ணீர் நிற்கக்கூடிய ஒரு இடத்தில் காந்தி மற்றும் பாஜக நிர்வாகிகள் சிலர் நிற்பது போல அந்த வீடியோ காட்சி இடம்பெற்றுள்ளது. வயதில் முதியவரான காந்தி இந்த அளவுக்கு தண்ணீரில் துணிச்சலாக இறங்கி நின்று மீட்பு பணி செய்கிறார் என்று பார்ப்பவர்கள் அதை பாராட்டும் அளவுக்கு அந்த காட்சி இருந்தது. ஆனால் அதன் பிறகு தான் ஒரு சம்பவம் நடந்து விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

டயர் ட்யூப்பில் இளைஞர்
இளைஞர் ஒருவரை காற்றடைத்த டியூப் ஒன்றில் அமர்த்தி உட்கார வைத்து நாலைந்து பாஜக நிர்வாகிகள் அந்த டியூப்பை தள்ளிக்கொண்டே வருகிறார்கள். முதலில் பார்த்தவர்களுக்கு அவர் கால் நடக்க முடியாதவர் அல்லது எங்கோ அடிபட்டு உயிருக்கு போராடியவரை பாஜகவினர் காப்பாற்றுகிறார்கள் என்று தோன்றியது. ஆனால் காந்தி முன்பாக அந்த ட்யூப் வந்த பிறகு திடீரென்று அதில் அமர்ந்து இருந்த இளைஞர் இறங்கி வெள்ள நீரில் நடக்க ஆரம்பித்துவிட்டார்.

நெட்டிசன்கள் கிண்டல்
இதைப்பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இத்தனைக்கும் தள்ளிக் கொண்டு வந்தவர்களை விட ட்யூப்பில் உட்கார்ந்து வந்தவர் வயது குறைவானவர். ஆரோக்கியமாக இருக்கிறார். எனவே மழை வெள்ளத்தில் நாங்கள் மீட்பு பணிகள் செய்கிறோம் என்பதை மக்களுக்குக் காட்டுவதற்காகதான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதே தவிர நிஜமான மீட்பு பணியில்லை என்று நெட்டிசன்கள் கூறுகிறார்கள். காந்தி அருகே ட்யூப் வந்ததோடு வீடியோ கட் செய்யப்பட்டிருந்தால், நிஜமான மீட்பு பணி என்றுதான் பதிவாகியிருக்கும். ஆனால் அதற்குபிறகும் வீடியோ தொடர்ந்ததால்தான், இந்த விஷயம் கிண்டலுக்குள்ளாகியுள்ளது.

அண்ணாமலை படகு பயணம்
சில தினங்களுக்கு முன்பு சென்னை கொளத்தூர் பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை படகு மூலமாக சென்று வெள்ள நிவாரணப் பணிகளை மேற்பார்வை செய்தார் . அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கிண்டலுக்கு உள்ளானது. இதற்கு காரணம், எப்படி கூட நிற்பவர்கள் இருக்க வேண்டும், எங்கே பார்த்து பேசவேண்டும் என்பது உள்ளிட்டவற்றை வீடியோகிராபர் சொல்லிக் கொடுக்கும் ஆடியோ பதிவு அத்தோடு சேர்த்து வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது எம்எல்ஏ காந்தி இடம் பெற்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.


Click it and Unblock the Notifications
