குடும்ப ஓய்வூதியம்.. தமிழக அரசு அறிவித்தபடி செயல்படுத்த .. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கோரிக்கை
கன்னியாகுமரி: தமிழக அரசின் அறிவுரைகளின் படி, தற்போது நடைமுறையில் உள்ள பணி ஓய்வூதியத்தை இறப்பின் நேர்வில் குடும்ப ஓய்வூதியமாக மாற்ற அதிக காலதாமதமும், நடைமுறை சிக்கல்களையும் தவிர்க்க, பணி ஓய்வூதியதாரர்களிடம் இருந்து அவர்தம் வாழ்க்கை துணையின் விவரங்களை பெற்று ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை தளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என்று மூத்தகுடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மூத்தகுடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நல உரிமைச்சங்கம் செயலாளர் பிறைசூடும் பெருமாள் பிள்ளை விடுத்துள்ள அறிக்கையில் கூறுகையில், "தற்போது நடைமுறையில் உள்ள பணி ஓய்வூதியத்தை இறப்பின் நேர்வில் குடும்ப ஓய்வூதியமாக மாற்ற அதிக காலதாமதமும், நடைமுறை சிக்கல்களையும் தவிர்க்க, பணி ஓய்வூதியதாரர்ளிடம் இருந்து அவர்தம் வாழ்க்கை துணையின் விவரங்களை பெற்று ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை தளத்தில் பதிவேற்றம் செய்திட தமிழக அரசின் அறிவுரைப்படி கருவூலத்துறை ஆணையர் அனைத்து மாவட்ட-சார் கருவூலங்களுக்கு 2023-ம் ஆண்டிலேயே அறிவுரை வழங்கியுள்ளார்.

ஆனால் இதுவரை அதற்கான பணி ஏதும் கருவூலத்தில் நடைபெற்றதாக தெரியவில்லை. எனவே ஓய்வூதியதாரர்களுக்கு பயன்தரத்தக்க அரசு ஆணையினை உடனடியாக நடைமுறைப்படுத்த கருவூலத்துறை ஆணையருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிறப்பு ஊதிய உயர்வு; தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அலுவலக உதவியாளர், வாட்ச்மேன், துாய்மைப்பணியாளர் உள்ளிட்ட குரூப் 'டி' பணிகளில் எவ்வித பதவி உயர்வும் பெறாமல் தொடர்ந்து 20 ஆண்டுகள், அதன் பின் கூடுதலாக 10 ஆண்டுகள் சேர்த்து 30 ஆண்டுகளை கடந்து பணியாற்றுபவர்களுக்கு சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும் நடைமுறை இருக்கிறது. இதற்காக ஊழியர்கள் பணியாற்றும் துறைகளில் இருந்து பரிந்துரை செய்து கருவூலத்துறைக்கு அனுப்பப்படுவது வழக்கம் ஆகும். ஆனால் சிறப்பு ஊதிய உயர்வு வழங்க இயலாத நிலை உள்ளதாக கூறி கருவூலத்துறை அலுவலர்கள் கைவிரிப்பதாக கூறிவருகிறார்கள்.
அரசாணை இருப்பதை சுட்டி காட்டியும், ஏன் வழங்க முடியாது எனக்கூறுவதை எழுத்து பூர்வமாக கொடுங்கள் என பரிந்துரை செய்தால், ஒருசில துறை அலுவலருக்கு சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படுவதாகவும் மற்றவர்களுக்கு கிடப்பில் போடப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தள்ளது.அதேபோல் ஓய்வு பெறும் நேரத்தில் கிடைக்க வேண்டிய சிறப்பு ஊதிய உயர்வை வழங்குவதிலும் தாமதம் ஏற்படுவதாகவும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications