காவி பலம் கறுப்பால் மறையக் கூடாது.. உயிரும் உடலும் போல் தமிழும் ஆன்மிகமும்.. தமிழிசை செளந்தரராஜன்!
கன்னியாகுமரி: ஆன்மிகமும் தமிழும், உயிரும் உடலும் போல் பிரிக்க முடியாதது என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வெள்ளி மலை ஹிந்து தர்ம வித்யா பீடம் சார்பில் நடைபெற்ற 33 வது வித்யா ஜோதி பட்டமளிப்பு மற்றும் 42 வது சமய வகுப்பு மாணவர் மாநாடு நடைபெற்றது. இந்த வித்யா ஜோதி பட்டமளிப்பு விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் வித்யா ஜோதி பட்டத்தை வெள்ளிமலை ஆசிரம சுவாமி சைதன்யானந்தஜீ மஹராஜ் வழங்கினார். பின்னர் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு கேடயங்களை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வழங்கினார்.

ஆன்மிகம் தான் அடிப்படை
இதனைத் தொடர்ந்து தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், தமிழகத்தில் ஹிந்து தர்மம் குறித்து பேசுவதும், ஆன்மீகத்தை குறித்து பேசுவதும் ஏதோ தவறான ஒரு நிகழ்வு போலவும் பேசக்கூடாத ஒன்றை பேசுவது போலவும் மாயத்தோற்றம் இருக்கிறது. இந்த மாயத்தோற்றம் நிச்சயமாக அகற்றப்பட வேண்டும். குமரியில் நம் பலத்தை காட்டிக் கொண்டிருக்கிறோம். இதே பலம் மற்ற இடங்களிலும் வரவேண்டும். ஆன்மிகம் தான் நம் அடிப்படை.

ஆன்மிகமும், தமிழும்
ஆன்மிகத்திற்கும் தமிழுக்கும் சம்பந்தமே இல்லை, தமிழை வேறு யாரெல்லாமோ வளர்த்தார்கள் என தெரிவிப்பது தவறு. ஆழ்வார்களும், நாயன்மார்களும் தமிழை வளர்த்தார்கள். உயிரையும் உடலையும் போல் தமிழகத்தையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது. அவநம்பிக்கை என கூறிவிட்டு சிலபேர் வீட்டில் உள்ளவர்களை வைத்து சாமி கும்பிட வைப்பார்கள். மறைமுகமாக சாமி கும்பிடுகிறார்கள் என்று தெரிவித்தார்.

தீபாவளி வாழ்த்து சர்ச்சை
தொடர்ந்து, ஆனால் காவியின் பலம் கறுப்பினால் மறைந்துவிடக்கூடாது. ஆளுநர் இப்படி பேசலாமா என கேள்வி கேட்பர். ஆளுநராக இருந்தாலும் நான் தமிழகத்தின் மகள். எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஒருவர் இருக்கிறார். அவர் ரம்ஜான் கிறிஸ்துமஸ்க்கு வாழ்த்து சொல்வார். ஆனால் தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மாட்டார்.

முதல்வர் ஸ்டாலின் மீது விமர்சனம்
தமிழகத்தில் தானே இருக்கிறீர்கள். அந்த பண்டிகைக்கும் வாழ்த்து சொல்லவேண்டியதுதானே என கேட்டேன். ஆனால் பக்கத்து வீட்டு அண்ணனுக்கு அது தெரியமாட்டேங்குது. ஒருவரின் எழுச்சி மற்றவரின் வீழ்ச்சி அல்ல. எல்லோரின் நம்பிக்கையும் மதிக்கப்படவேண்டும். பெரும்பான்மையினரின் நம்பிக்கை மட்டும் அவமதிக்கப்படும்போது எழுச்சிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

ஹிந்தி திணிப்பு இல்லை
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், இந்தியாவில் எங்கும் இந்தியை திணிக்கவில்லை. நாடாளுமன்றம் நிலைக்குழுவினர் பரிந்துரை செய்திருக்கிறார்கள். அதில் எங்குமே மாநில மொழியை குறைத்து மதிப்பிடவேண்டும் என்றோ, மாநில மொழியை மீறி ஹிந்தியை கொண்டு வர வேண்டும் என்றோ சொல்லவில்லை. இதை வைத்து மட்டும்தான் அரசியல் செய்யமுடியும் என்பதற்காக மறுபடியும் கையில் எடுக்கிறார்கள்.

தாய் மொழி மீதான பற்று
திமுகவுக்கு எவ்வளவு தாய் மொழி பற்று இருக்கிறதோ, அதே தமிழ் பற்று எங்களுக்கும் இருக்கிறது. இந்தி மொழி அதிகம் பேசும் மத்திய பிரதேசத்தில் தாய் மொழி வழி மருத்துவ கல்வி முறையை கொண்டு வந்திருக்கின்றனர். இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்து தமிழ் வழியில் ஒரு புத்தகம் கொண்டு வர முடியவில்லை. தமிழ் வழியில் ஒரு மருத்துவ கல்லூரி கொண்டு வர முடியாதா, தமிழில் புது புது முயற்சிகளை செய்து நீங்கள் உண்மையிலேயே தமிழுக்கு தொண்டாற்றுகிறோம் என்ற உணர்வை ஏற்படுங்கள் என்று விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications