நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அரசு ஊழியருக்கு அவமானம்.. கடன்காரர்கள் செயலால் விபரீதம்
கன்னியாகுமரி: நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வரும் சுரேந்திரன் என்பவரிடம் பணியில் இருந்த போது கடனை கேட்டு கும்பல் ஒன்று மிரட்டி உள்ளது. இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் காந்திநகர் காலனியை சேர்ந்த 52 வயதாகும் சுரேந்திரன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வந்தார். சுரேந்திரன் நேற்று காலையில் வழக்கம் போல் பணிக்கு வந்தார். பணியில் இருந்த சிறிது நேரத்தில் சுரேந்திரன் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

உடனே சக ஊழியர்கள் அலுவலக உதவியாளர் சுரேந்திரனை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தார்கள். அப்போது பாதி மயக்கத்தில் இருந்த அவர் 'நான் விஷ மாத்திரை சாப்பிட்டேன்...' என்று கூறியுள்ளார். இதனையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஆசாரிபள்ளம் போலீசுக்கு உடனே மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் சுரேந்திரனுக்கு கடன் தொல்லை இருந்துள்ளது. இவர் பலரிடம் இருந்து அதிக வட்டிக்கு கடன் வாங்கி இருக்கிறார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்து வந்தனர். அடிக்கடி வீட்டுக்கு வந்தும் பணத்தை கேட்டுள்ளனர். அப்போது விரைவில் பணத்தை தந்துவிடுவதாக அவர் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் சுரேந்திரன் பணியில் இருந்தார். அப்போது கும்பலாக வந்த சிலர் மருத்துவமனையில் பணியில் இருந்த சுரேந்திரனிடம் பணத்தை திரும்ப கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் வேதனை அடைந்த சுரேந்திரன் விஷ மாத்திரைகளை வாங்கி வந்து சாப்பிட்டு மயங்கி விழுந்து இறந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பணியில் இருந்த போது கடனை கேட்டு மிரட்டிய கும்பலால் அரசு மருத்துவக்கல்லூரி அலுவலக உதவியாளர் தற்கொலை செய்த சம்பவம் நாகர்கோவிலில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications