விவேகானந்தர் பாறையில் இருந்து சுற்றுலா பயணிகள் திடீர் வெளியேற்றம்.. காலையில் அனுமதி.. மதியம் ரத்து!
கன்னியாகுமரி: விவேகானந்தர் பாறையில் இருந்து சுற்றுலா பயணிகள் திடீரென வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்று காலை முதல் அனுமதி அளித்து வந்த நிலையில் திடீர் வெளியேற்றத்தால் சுற்றுலா பயணிகள் குழம்பி உள்ளனர்.
பிரதமர் மோடி கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் சுமார் 45 மணி நேரம் அமர்ந்து தியானம் செய்கிறார். நேற்று மாலை தனது தியானத்தை தொடங்கிய பிரதமர் மோடி, நாளை பிற்பகல் வரை தியானத்தை தொடர்கிறார். இதன் காரணமாக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்று காலை விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். அந்த நேரத்தில், கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் அமைந்துள்ள கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. பின்னர், சூரிய உதயம் பார்ப்பதற்கு மட்டும் தீவிர சோதனைக்கு பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று காலை மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொண்டு வருவதையடுத்து, விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல நேற்று பிற்பகல் முதலே பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அனுமதி வழங்கப்பட்டது.
பிரதமர் மோடி அங்கு தியானம் செய்து வருவதன் காரணமாக கடும் பாதுகாப்பு சோதனைக்கு பிறகு விவேகானந்தர் மண்டபம் செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அதே சமயம், செல்போன்கள் மூலம் வீடியோ எடுக்கவும் கேமரா கொண்டு செல்லவும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்தனர். எனினும், பிரதமர் மோடி தியானம் செய்யும் தியான மண்டபத்திற்கு அனுமதி இல்லை. ஸ்ரீபாத மண்டபம் வரை பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 11.30 மணிக்கு மேல் விவேகானந்தர் பாறையில் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அங்கிருந்து திடீரென வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்று காலை முதல் அனுமதி அளித்து வந்த நிலையில் திடீர் வெளியேற்றத்தால் சுற்றுலா பயணிகள் குழம்பி உள்ளனர்.
பிரதமர் மோடி, விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிப் பார்க்க உள்ளதால் பொதுமக்கள் வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விவேகானந்தர் பாறைக்கு இன்று காலை முதல் நடந்து வந்த சுற்றுலா படகு சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்காக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள், விவேகானந்தர் பாறைக்கு செல்ல திட்டமிட்டு படகில் செல்ல வந்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications