ஆதார் கார்டு போல தமிழ்நாடு சிட்டிசன் பிரிவலன்ஞ் கார்டு வழங்கப்படும்.. குமரியில் விஜய் பேச்சு
கன்னியாகுமரி: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மகாதானபுரம் பகுதியில் பரப்புரை செய்த விஜய் தவெக ஆட்சிக்கு வந்தால், ஆதார் கார்டை போல தமிழ்நாடு சிட்டிசன் பிரிவலன்ஞ் கார்டு வழங்கப்படும் என்று கூறினார். மேலும் லஞ்சம் இல்லாமல் அரசின் ஒவ்வொரு நலத்திட்டமும் வீடு தேடி வரும் என்றும் அவர் கூறினார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, தவெக, நாதக என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்ளிட்டோர் தினமும் பல தொகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகள் என இரண்டு இடங்களில் நடிகர் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். எடப்பாடி தொகுதியை தவிர மீதமுள்ள 233 தொகுதிகளிலும் அக்கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக விஜய் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
பெரம்பூர், கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், தொடர்ந்து வில்லிவாக்கத்தில் பிரசாரத்திற்கு காவல் துறையினர் ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கினர். இதனால், அந்தப் பிரசாரத்தை விஜய் ரத்து செய்தார். இதையடுத்து திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி உட்பட 3 தொகுதிகளில் விஜய் நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. மதுரை விமான நிலையத்தில் இருந்து காரைக்குடிக்கு விஜய் வருவதற்கே மிகவும் தாமதம் ஏற்பட்டது. விஜய் வரும் வழியில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால், பிரச்சாரக் கூட்டம் நடைபெற இருந்த இடத்திற்கு விஜய் வந்து சேர காலதாமதம் ஏற்பட்டது.
அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியதால் அங்கு பேசாமலேயே ரோடு ஷோ மட்டும் சென்றுவிட்டு விஜய் புறப்பட்டுச் சென்றார். இது விஜய் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கடலூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்யவிருந்த நிலையில் திடீரென பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
கன்னியாகுமரியில் விஜய் இன்று பரப்புரைக்கு பதில் விஜய் ரோடு ஷோ செல்லவுள்ளார். குமரி மாவட்டத்தில் விஜய் பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. திடீரென இன்று நடைபெறவிருந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது.
பொதுக்கூட்டத்திற்கு பதிலாக மதியத்துக்கு மேல் விஜய் ரோடு ஷோவில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானா பகுதியில் இருந்து கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் வரை பைபாஸ் சாலையில் ரோடு ஷோ செல்லவுள்ளார். அப்போது அவர் மக்கள் மத்தியில் உரையாற்றவும் உள்ளார். இதற்கு அனுமதி கோரி தவெக நிர்வாகிகள் மனு அளித்த நிலையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை ரோடு ஷோ செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தற்போது தூத்துக்குடிக்கு வந்தடைந்தார் விஜய். பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரிக்கு சென்றடைந்தார். வழி நெடுகிலும் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது குமரி மகாதானபுரம் பகுதியில் பரப்புரை செய்த விஜய் தவெக ஆட்சிக்கு வந்தால் என்பது குறித்தும் பேசினார். அவர் கூறுகையில், ஆதார் கார்டை போல தமிழ்நாடு சிட்டிசன் பிரிவலன்ஞ் கார்டு வழங்கப்படும். மேலும் லஞ்சம் இல்லாமல் அரசின் ஒவ்வொரு நலத்திட்டமும் வீடு தேடி வரும் என்றும் அவர் கூறினார்.
இதன் பிறகு விஜய் கன்னியாகுமரி, நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர் தொகுதி தவெக வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரிக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications