விவசாயிகளுக்கு 2 லட்சம் பரிசுடன் நம்மாழ்வார் விருது.. எப்படி விண்ணப்பிப்பது? அதிகாரி விளக்கம்
கன்னியாகுமரி: இயற்கை வேளாண்மையின் தந்தை' என அழைக்கப்படும் நம்மாழ்வார் நினைவாக, தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு 'விவசாயி நம்மாழ்வார் விருது' (Uzhavar Nammazhvar Virudhu) என்ற விருது வரும் ஆண்டில் இருந்து வழங்கப்பட உள்ளது. . விருதுடன் ரொக்கப் பரிசு ரூ.2 லட்சம், சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவை முதல்வரால் வழங்கப்பட உள்ளது. இதற்கான தகுதிகள் என்ன, யாரெல்லாம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை பார்ப்போம்.
இயற்கை வேளாண்மையின் தந்தை' என அழைக்கப்படும் நம்மாழ்வார் நினைவாக, தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு 'விவசாயி நம்மாழ்வார் விருது' தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவதிலும், நிலைநிறுத்துவதிலும் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவும், பிற விவசாயிகளும் இந்த முறையைப் பின்பற்ற ஊக்குவிக்க வேண்டும் என்று கருதி இந்த திட்டத்தை இந்த நிதியாண்டில் இருந்து தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

இதுபற்றி கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ஜென்கின் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "2025-2026-ம் நிதியாண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என அறிவித்தார். உயிர்ம வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடுவதோடு, அதனை ஊக்குவித்து பிற விவசாயிகளும் உயிர்ம வேளாண்மையில் ஈடுபடச் செய்யும் விவசாயிகளுக்கும் நம்மாழ்வார் பெயரில் விருதுகள் வழங்கி தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது.
இயற்கை வேளாண்மை விவசாயிகளுக்கு விருது
உயிர்ம வேளாண்மை என்பது செயற்கை ரசாயன உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தவிர்த்து, இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, இயற்கை மற்றும் உயிர்ம எரு பயன்படுத்துதல் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர் சாகுபடி செய்யப்படுவதோடு மண் வளத்தையும் பாதுகாப்பது ஆகும்.
நம்மாழ்வார் விருது பெற தகுதிகள்
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் உயிர்ம வேளாண்மையில் சாகுபடி செய்தல் வேண்டும். முழுநேர உயிர்ம விவசாயியாக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் உயிர்ம வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். உயிர்ம வேளாண்மைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2 லட்சம் பரிசு கிடைக்கும்
இத்திட்டத்தில் வெற்றிபெறும் 3 விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும். விருதுடன் ரொக்கப் பரிசு ரூ.2 லட்சம், சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவை முதல்வரால் வழங்கப்படும். நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ்நெட் வளைதளத்தில் வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான பதிவுக் கட்டணம் ரூ.100 ஆகும். மேலும் இது தொடர்பான தகவலுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications