"10 ஆயிரம் கோடி அடிச்சுட்டு ஜெயிலுக்குப் போக நாங்க வரல".. மேடையில் ஓபனாக பேசிய புஸ்ஸி ஆனந்த்
கன்னியாகுமரி: 5 ஆயிரம் கோடி, 10 ஆயிரம் கோடி அடிச்சுட்டு ஜெயிலுக்குப் போக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்ய மட்டுமே வந்திருக்கிறோம் என்று கன்னியாகுமரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசினார்.
கன்னியாகுமரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்றுப் பேசியதாவது: இளைஞர்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு. கடந்த 15 ஆண்டுகளில் நீங்கள் எல்லோரையும் பார்த்துவிட்டீர்கள். இந்த முறை ஒரே ஒரு வாய்ப்பு கொடு என்று தான் கேட்பார்கள். 32 ஆண்டுகளாக விஜய் உச்சத்தில் இருக்கிறார். அந்த உச்சத்தை மக்களாகிய நீங்கள் கொடுத்தீர்கள். அந்த உச்சத்தில் இருக்கும்போதே மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்தான் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்.

ரிட்டையர்மென்ட் ஆகிவிட்டு அரசியலுக்கு வரவில்லை. இன்னும் 15 ஆண்டுகளுக்கு விஜய் மட்டுமே உச்சத்தில் இருப்பார். ஆனால், அவற்றை எல்லாம் விட்டுவிட்டு தன்னை உச்சத்தில் உட்கார வைத்தவர்கள் மக்கள். என் மக்களுக்காக நான் செய்வேன் என்று வந்தவர் அவர். அந்த தலைவர் எங்களை நல்லவிதமாக ஒழுக்கத்துடன் வளர்த்துக் கொண்டிருக்கிறார். அதன்படி தான் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
நாங்கள் இப்போது மட்டும் வந்து நலத்திட்டங்களை வழங்கவில்லை. கடந்த 35 ஆண்டுகளாக அன்று முதல் இன்று வரை ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். கொரோனா காலகட்டங்களில் யார் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை. எல்லோரும் பதுங்கி விட்டார்கள். எல்லோருக்கும் உயிரின் மேல் பயம். ஆனால், எங்களின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒவ்வொரு தோழரும் மளிகைப் பொருட்கள், காய்கறிகள், ரத்த தானம் முதற்கொண்டு செய்தனர்.
எங்களுக்குப் பணத்திற்கு மேல் எந்தவொரு ஆசையும் இல்லை. தலைவர் விஜய் அவர்கள் 2026 இல் அந்த இடத்தை அடைய வேண்டும். ஆட்சியில் அமர்ந்த பிறகு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். 5 ஆயிரம் கோடி, 10 ஆயிரம் கோடி அடிச்சுகிட்டு ஜெயிலுக்குப் போக நாங்கள் வரவில்லை. எங்களுக்கு காலையில் ஒரு 5 இட்லி, மதியம் கொஞ்சம் சாதம், இரவு ஒரு 5 இட்லி அது எங்களுக்கு போதும். எவ்வளவோ ஏழை மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்றார்.












Click it and Unblock the Notifications