தேம்பி தேம்பி அழுது.. "ஐயா.. மாடு என்னை தேடும்.. புல் அறுத்து போடணும்".. நெகிழ வைத்த விவசாயி
விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மயங்கி விழுந்துவிட்டார் ஒரு விவசாயி
கன்னியாகுமரி: இந்த உலகம் இன்னமும் தழைத்திருப்பதற்கு காரணமே, அன்பும், மனிதமும்தான்... சுருங்கி வரும் மனித மனங்களில், சில உணர்வு பிழம்புகளும், நெகிழ்ச்சி சம்பவங்களும்தான், மிச்சம் உள்ள வாழ்க்கையை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவி கொண்டிருக்கிறது.. அப்படி ஒரு சம்பவம்தான் கன்னியாகுமரியில் நடந்துள்ளது..!
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது.. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்..
இதில் கலந்து கொள்வதற்காக, மாவட்டம் முழுமையில் இருந்தும், ஏராளமான விவசாயிகள் வந்திருந்தனர்.. அவர்கள் கையில் ஏராளமான கோரிக்கைகள் அடங்கிய மனுக்களும் இருந்தன..

குழுமிய கூட்டம்
கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் அரவிந்த் பெற்றுக்கொண்டார்... பிறகு விவசாயிகளிடம் கருத்து கேட்பு நடந்தது.. பல விவசாயிகள் தங்களின் கருத்துக்களை கூட்டத்தில் முன்வைத்தனர்.. முக்கியமாக, யூரியா உரம் கடந்த ஒரு மாதமாக தட்டுப்பாடு இருந்து வருவதாகவும் விவசாயிகளுக்கு தேவையான உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெரும்பாலானோர் கோரிக்கை விடுத்தனர்.

திடீர் மயக்கம்
இதைதவிர, வேறு சில குறைகளையும் விவசாயிகள் கலெக்டரிடம் சொல்லி கொண்டிருந்தனர்.. அப்போது, விஷ்ணு என்ற விவசாயி திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டார்.. இதை பார்த்து கலெக்டர் உட்பட மொத்த பேரும் பதறிப் போய்விட்டனர்.. உடனடியாக அவருக்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தை தெளிய வைத்தனர்.. பிறகு, கூட்டத்தில் இருந்து அவரை மீட்டு வெளியே கொண்டு வர முயன்றபோது, திடீரென அந்த விவசாயி வேதனையுடன் புலம்ப ஆரம்பித்துவிட்டார்..

நெற்கதிர்கள்
"என்னுடைய விவசாய நிலத்தை இன்னொருத்தர் ஆக்கிரமிச்சிட்டாரு.. என் நிலத்தை அவர்தான் வைத்திருக்கிறார்.. இதை பற்றி பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. போலீசுக்கு போய் மனு தந்தேன்.. ஆனால் அவங்க எதிர் மனுதாரருக்கு சாதகமாக இருக்காங்க.. என் நிலத்தில் பயிரிட்ட நெல் கதிர்களை அறுவடை செய்ய முடியாத நிலைமை இருக்கிறது.. குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாம்ன்னு இருக்கேன்" என்றார்..

மாடு இருக்கு
இதை கேட்ட சக விவசாயிகள், உங்களுக்கு உடம்பு சரியில்லை, முதலில் ஆஸ்பத்திரிக்கு போகலாம் வாங்க, என்று சொல்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது... அப்போது விவசாயி திடீரென அழ ஆரம்பித்துவிட்டார்.. "ஆஸ்பத்திரியெல்லாம் வேணாம்.. இங்கியே நேரமாயிடுச்சு.. வீட்டில் மாடு இருக்கு.. என்னை தேடும்.. புல் அறுத்து மாடுக்கு போடணும்.. நான் வீட்டுக்கு போறேன்" என்று அழுதுகொண்டே சொல்லிவிட்டு போனார்.. அவர் அப்படி சொல்வதை கேட்டு, அங்கிருந்தோர் உட்பட கலெக்டர் ஆபீஸே நெகிழ்ச்சியில் உறைந்து போய்விட்டது.












Click it and Unblock the Notifications