20 அடி சேர்த்து தோண்டினேன்! அதுக்குன்னு ரூ.23 கோடி அபராதமா? திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி ஆதங்கம்!
கரூர்: கல்குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 20 அடி மட்டுமே சேர்த்து தோண்டியதாகவும் அதற்காக ரூ.23 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருப்பது கொஞ்சம் ஓவர் எனவும் ஆதங்கம் தெரிவித்துள்ளார் திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பழனியாண்டி. குளித்தலை அருகே உள்ள அய்யர்மலையில் இவருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் அந்த குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட சட்டவிரோதமாக கூடுதலாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக கூறி கரூர் மாவட்ட நிர்வாகம் ரூ.23 கோடி அபராதம் விதித்துள்ளது.

இதனால் நொந்து போன பழனியாண்டி எம்.எல்.ஏ. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வாக இருக்கும் போதே இப்படியா என தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பித் தள்ளியதோடு அமைச்சர் நேரு மீதான மன வருத்தத்தையும் கொட்டித் தீர்த்திருக்கிறார். இதனிடையே கல் குவாரி புகார் தொடர்பாக செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், கூடுதலாக 20 அடிக்கு குவாரியில் தோண்டியது உண்மை தான் என்றும் ஆனால் ஏன் அப்படி தோண்டினேன் என்பதற்கு விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு கல்குவாரிக்காக ஐந்தரை ஏக்கரை தாம் லீசுக்கு எடுத்ததாகவும் அதில் 3 ஏக்கரில் கற்கள் இல்லை எனவும் இருக்கின்ற 2 ஏக்கரில் மட்டுமே கற்கள் வெட்டி எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 3 ஏக்கரில் கற்கள் வெட்டி எடுக்க முடியாததால் கற்கள் உள்ள 2 ஏக்கரில் கூடுதலாக 20 அடிக்கு தோண்டினேன் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்காக ரூ.23 கோடி அபராதம் விதிப்பதா என கரூர் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிரான அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார். தனது கல் குவாரிக்கு யார் வேண்டுமானாலும் வந்து அளந்து பார்த்துக் கொள்ளலாம் என்றும் எக்ஸ்ட்ரா 20 அடிக்கு 30 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் போடலாம் என்றும் 23 கோடி ரூபாய் என்பது ரொம்ப ஓவர் எனவும் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications