"மாங்கல்யம் தந்துனானே" கரூர் பெண்ணுக்கு தாலி கட்டிய தென்கொரிய மாப்பிள்ளை.. தமிழ் முறைப்படி டும்டும்
கரூர்: பேஸ்புக்கில் அறிமுகமான நட்பு நாளடைவில் காதலாக மாறி, இப்போது இருவீட்டார் சம்மதத்துடன் தென் கொரிய மாப்பிள்ளைக்கும், தமிழ்நாட்டு கரூர் இளம்பெண்ணுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளது.
காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள்.. மொழி, இனம், அந்தஸ்து என எந்த பாகுபாடும் உண்மையான காதலுக்கு இல்லை என்பதையே இவ்வாறு சொல்வதுண்டு. அன்பும் பாசமும் புரிதலும் இருந்தால் போதும்... எப்பேற்பட்ட தடைகளை தாண்டியும், கடல் கடந்த காதலும் நிச்சயம் கைகூடும் என்று பல சினிமாக்களில் கூட காட்டப்பட்டு இருக்கும்.

அதேபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது கரூரில் நடந்துள்ளது. தென் கொரியாவை சேர்ந்த வாலிபரோடு காதல் வயப்பட்ட இளம்பெண் தற்போது தென் கொரியா நாட்டு மருமகளாகியிருக்கிறார் விஜயலட்சுமி. தமிழ்நாட்டு பெண்ணை இந்து முறைப்படி தாலி கட்டி தன் மனைவியாக்கியிருக்கிறார் தென் கொரியா மாப்பிள்ளை மின்ஜூன் கிம்.
கடல் கடந்து இவர்களது காதல் எப்படி கை சேர்ந்தது என்பது பற்றியும், இவர்கள் காதல் எங்கே தொடங்கியது என்பது குறித்தும் இங்கே பார்க்கலாம்.
தென் கொரியாவை சேர்ந்தவர் மின்ஜூன் கிம். 28 வயதான இவருக்கு பேஸ்புக் மூலமாக கரூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்ற 28 வய்து இளம்பெண்ணின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் நட்புடன் பழகி வந்தனர். ஆரம்பத்தில் நண்பர்களாகவே இவர்களது பழக்கம் இருந்தது.
தொடர்ந்து படிப்படியாக இவர்களது நட்பு காதலாக மலர்ந்தது. ஒருவரை ஒருவர் விரும்புவதாக தெரிவித்துக்கொண்ட மின்ஜூன் கிம் மற்றும் விஜயலட்சுமிஇருவரும் மனம் விட்டு பேச தொடங்கினர். இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர். விஜயலட்சுமிக்கு முதலில் இது பற்றி தன் பெற்றோரிடம் தெரிவித்தால் திருமணம் செய்து வைப்பார்களா என்ற தயக்கம் இருந்தது.
எனினும் பெற்றோரிடம் தன் காதலை தெரிவித்துள்ளார். இதேபோன்று மின்ஜூன் கிம்மும் தன் காதலை பற்றி பெற்றோரிடம் கூறியிருக்கிறார். தொடர்ந்து இருவீட்டாரும் இவர்களது காதலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர். இதன் பின்னர் தான் விஜயலட்சுமியை தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக மின்ஜூன் கிம்முடன் பெற்றோர், உறவினர்களும் தென் கொரியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர் .
தொடர்ந்து பேசி இந்து முறைப்படி மின்ஜூன் கிம் - விஜயலட்சுமிக்கு திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். பேனர் வைத்து, பத்திரிக்கை அடித்து, விருந்து வைத்து, ரிசப்சன் என திருமணத்தை ஜாம் ஜாம் என்று நடத்தியுள்ளனர். தென் கொரியா மாப்பிள்ளையான மின்ஜூன் கிம்மும் அனைத்து நிகழ்சிகளிலும் முகமலர்ச்சியோடு நின்றதை பார்க்க முடிந்தது.
இன்று இவர்களது திருமணம் இந்து முறைப்படி இனிதே நடந்து முடிந்தது. இருவீட்டார் மட்டுமின்றி பலரும் மணமக்களை வாழ்த்தி சென்றுள்ளனர். கடல் கடந்த காதல் தற்போது திருமணத்தில் முடிந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக மணமகனும், மணமகளும் கூறினர்.












Click it and Unblock the Notifications