Karur Stampede: “கூட்டத்துல ரிங்டோன் கேக்கலைனு நெனைச்சேன்.. கடைசில..” மனைவி, மகளை இழந்தவர் கண்ணீர்!
கரூர்: கரூரில் நேற்று நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியாகியுள்ளனர். விஜய்யை பார்க்க வேண்டும் என தனது மகள் அடம் பிடித்ததால் மனைவியையும், மகளையும் பிரச்சாரக் கூட்டத்துக்கு அனுப்பிய தந்தை கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.
கரூரின் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பிரசாரம் நடைபெற்ற இடத்தில் திரண்டிருந்த கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் அப்பகுதியில் கடுமையான நெரிசல் உண்டானது. அதில் பலர் மயக்கமடைந்து விழுந்தனர். இந்த துயரச் சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 40 பேர் பலியாகினர்.

கரூரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஏமூர் புதூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் டாஸ்மாக் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரியத்ஷினி. எம்.ஏ பி.எட் பட்டதாரி. இந்த தம்பதிக்கு தாரணிகா, நிதிகா என்ற இரு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 9 வயதான நிதிகா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
14 வயதான தாரணிகா, அருகில் உள்ள மெட்ரிக் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தீவிர விஜய் ரசிகையான தாரணிகா, கரூரில் தவெக சார்பில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்திற்கு விஜய்யை காணும் ஆவலில் தனது தாயுடன் சென்றுள்ளார். காலை 11 மணிக்கே கூட்டத்துக்கு சென்றவர்கள், விஜய்யின் பேச்சு முடிந்தபிறகும் வீடு திரும்பாத நிலையில், அவர்கள் இருவரும் இறந்து விட்டார்கள் என்ற செய்தி மட்டும்தான் சக்திவேலுக்கு வந்த சேர்ந்தது.
விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தாயும், மகளும் பரிதாபமாக உயிரழந்தனர். இருவரது உடல்களும் இன்று ஏமூர் புதூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது. மொத்தமாக அந்த கிராமத்தில் மட்டும் 5 பேர் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
தனது மனைவியையும், மகளையும் பறிகொடுத்த சக்திவேல் அளித்துள்ள பேட்டியில், "நேற்று மதியம் எனது மகளும், மனைவியும் அவர்களுக்கு பிடித்த நடிகரான விஜய்யை பார்க்க போவதாக உற்சாகத்துடன் சென்றனர். இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என நான் நினைக்கவில்லை. என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை.
இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அதிகமான கூட்டம் கூடும் என எனக்கு தெரியும். நான் அவர்களை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருக்க வேண்டும். எனது மனைவியும் மகளும் அங்கு சென்றது தவறுதான். அந்தக் கூட்டத்தை பார்த்த பிறகாவது, அவர்களை திரும்பும்படி கண்டித்திருக்க வேண்டும். நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அவர்கள் கிளம்பி போனார்கள்.
நிகழ்ச்சி முடிவடைந்ததை டிவியில் பார்த்துவிட்டு, நான் அவர்களுக்கு செல்போனில் அழைத்தேன். ஆனால், யாரும் அழைப்பை எடுக்கவில்லை. சரி, கூட்டத்தில் ரிங்டோன் சத்தம் கேட்டிருக்காது என நினைத்தேன். ஆனால், சிறிது நேரத்தில் ஒருவர் செல்போனில் அழைத்து இருவரும் உயிரிழந்து விட்டதாக கூறினார். என் வாழ்க்கையையே இழந்து நிற்கிறேன்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இதே செப்டம்பர் மாதத்தில்தான் எனது இளைய மகளை இழந்தேன். தற்போது எனது குடும்பத்தில் அனைவரையும் இழந்து தவிக்கிறேன். இனிமேல் இதுபோன்ற கூட்டங்களில் நெரிசல் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கைகளுடன் கூட்டம் நடத்தப்பட வேண்டும்." என கதறி அழுதுள்ளார்.












Click it and Unblock the Notifications