அம்மாவை நினைத்து கண்ணீர் விட்ட ஜோதிமணி! "நாங்களும் உங்க அம்மா தான்.." ஆறுதலாக வந்த குரல்! நெகிழ்ச்சி
கரூர்: கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி சொந்த கிராமத்தில் பிரச்சாரம் செய்யும் போது தாயாரை நினைத்துக் கண்ணீர்விட்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் இந்தாண்டு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் திமுக தலைமையில் வலுவான இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. இதில் உள்ள காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உட்பட 10 லோக்சபா தொகுதிகளில் போட்டியிடுகிறது.
கரூர் லோக்சபா தொகுதி: இதில் கரூர் தொகுதியில் காங்கிரஸை சேர்ந்த சிட்டிங் எம்பி ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அவர் கரூர் தொகுதி முழுக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது சொந்த கிராமத்துக்குச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்ட கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, தனது அம்மா நினைப்பு வந்ததும் கண்கலங்கினார்.
அங்கே பொதுமக்களிடையே பேசிய ஜோதிமணி, "காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை, சிலிண்டர் விலை எல்லாமே கட்டுக்குள் இருந்தது. ஆனால், பாஜக ஆட்சியில் விலை எங்கேயோ போய்விட்டது. இந்த நிலை மாற அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
கண்ணீர்விட்ட ஜோதிமணி: நம் ஊரில் நான் அதை இதை எல்லாம் சொல்லி வாக்கு கேட்கத் தேவையில்லை. கடந்த 5 ஆண்டுகளாக இங்கே லோக்சபா எம்பியாக இருந்துள்ளேன். என்னால் முடிந்தவரைச் சிறப்பாக பணியாற்றி உள்ளேன். பல ஊர்களில் திட்டங்களைக் கவனிக்க வேண்டி இருந்ததால் நமது ஊருக்கு வரவே இரவாகிவிடும். அந்தளவுக்கு பணிச்சுமை இருந்தது.
நெகிழ்ச்சி: ஆனால், அம்மா இருந்து இருந்தால்.." என்று சொன்ன அவர் சில நொடிகள் தனது தாயை நினைத்துப் பேச முடியாமல் நா தழுதழுத்துப் போய் நின்றார். அப்போது கூட்டத்தில் இருந்த வயதான பெண் ஒருவர், "நாங்க எல்லாம் உங்களுக்கு அம்மா தான் அழுவாதீங்க" என்றார். இதைக் கேட்ட பிறகே சற்று ஆசுவாசமடைந்த ஜோதிமணி தொடர்ந்து பேசினார்.
"அம்மா இருந்து இருந்தால் பணிச் சுமை தெரிந்து இருக்காது" என்று அவர் பேசும் போது அவரையும் கட்டுப்படுத்த முடியாமல் மீண்டும் கண்ணீர்விட்டார். தொடர்ந்து பேசிய அவர், "நீங்க அனைவரும் தான் இத்தனை காலம் எனது குடும்பம் மாதிரி இருந்துள்ளீர்கள். இதற்காக அனைவரும் நன்றி" என்று சொல்லிவிட்டு அதன் மேல் பேச முடியாமல் அங்கிருந்து நகர்ந்தார்.
கலங்கிப் போனார்: தனது தொகுதி முழுக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த ஜோதிமணி, சொந்த கிராமத்திற்கு வந்ததும் தாயாரை நினைத்துக் கண்கலங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் கரூரில் காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி போட்டியிட்டார். அதிமுக சார்பில் தம்பிதுரை, நாம் தமிழர் சார்பில் கருப்பையா ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 6.9 லட்சம் வாக்குகளைப் பெற்ற ஜோதிமணி 4.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தார்.
இந்த முறை அங்கே ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் கேஆர்எல் தங்கவேல், பாஜக சார்பில் விவி செந்தில்நாதன், நாம் தமிழர் சார்பில் கருப்பையா களமிறங்குகிறார்கள்.












Click it and Unblock the Notifications