கரூரே கதிகலங்கிப் போச்சு.. மாணவியின் கழுத்தில் இறங்கிய கத்தி! என்ன நடந்தது? போலீஸ் சொன்ன விளக்கம்!
கரூர்: கரூர் அருகே தரங்கம்பாடியில் பத்தாம் வகுப்பு மாணவியின் கழுத்தை பனிரெண்டாம் வகுப்பு மாணவர் அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாணவி கொலை முயற்சி சம்பவம் குறித்து தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் என கரூர் மாவட்ட காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை எனவும், சில ஊடகங்கள் இது குறித்து தவறான செய்தி வெளியிட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி படித்திருக்கிறார் அவருக்கும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவருக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த மாணவியை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்ட மாணவன் வீட்டிற்கு வெளியே அழைத்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவியும் அந்த மாணவரை பார்க்க வந்த நிலையில் திடீரென அந்த மாணவர் மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடி இருக்கிறார்.
தற்போது படுகாயமடைந்த அந்த மாணவி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கரூர்மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் மாணவியின் கழுத்தை அறுத்த மாணவனிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கு இடையே சில தொலைக்காட்சிகளில் பாதிக்கப்பட்ட மாணவியும் மாணவனும் காதலித்து வந்ததாகவும், மாணவியை தனியே அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும் அந்த மாணவி கத்தி கூச்சலிட்டதால் கழுத்து அறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. மேலும் அந்த மாணவனுடன் மேலும் சில மாணவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் மாணவி கொலை முயற்சி சம்பவம் குறித்து தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் என கரூர் மாவட்ட காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," சில செய்தி தொலைக்காட்சிகளில் 24.02.2025 ஆம் தேதி மாணவி கூட்டுபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டதாக தவறான தகவல் வெளியிட்டதற்கு மறுப்பு அறிக்கை தெரிவித்தல் தொடர்பாக."
23.02.2025 ஆம் தேதி இரவு கடவூர் தாலுகா பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி இரவு 20.00 மணிக்கு வீட்டில் இருந்த போது மாணவியின் உறவினரான அதே ஊரைச் சேர்ந்த 17 வயது மாணவன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வெளியே வரவழைத்து கத்தியால் கழுத்துப் பகுதியில் குத்தி கொடுங்காயம் ஏற்படுத்தியுள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த ஒரு பவுன் செயினையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.
இது குறித்து விசாரணையில் மேற்படி மாணவி அந்த மாணவனைப் பற்றி இழிவாக பேசியதாக கோபம் கொண்டு இந்த செயலை அந்த மாணவன் செய்துள்ளதாக தெரிகிறது. மேற்படி மாணவன் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார். இந்நிலையில் மேற்படி செய்தியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கத்தியால் குத்தியதாக சில செய்தி சேனல்களில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனவே உண்மைக்கு புறம்பான தகவல்களை செய்தியாக வெளியிட வேண்டாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது."என கரூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
