Karur stampede: கரூரில் இன்று கடையடைப்பு அறிவிப்பு.. வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இரங்கல்
கரூர்: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நிலையில், விஜயைக் காணவும், அவரது பேச்சைக் கேட்பதற்காகவும் ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள் வந்த நிலையில் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 39 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சபவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கரூரில் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் நேற்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். விஜய் பிரச்சாரத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் பிரச்சாரப் பகுதியில் காலை முதலே திரண்டிருந்தனர். பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். வெள்ளிக்கிழமை இரவு முதல், சனிக்கிழமை காலை முதலே என விஜயைக் காண்பதற்காக ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்தனர்.

கரூர் விஜய் கூட்டத்திற்கு சுமார் 10,000 பேர் வருவார்கள் என்று தவெகவினர் கூறியிருந்தனர். ஆனால் அதிகளவு கூட்டம் கூடியது. ஒரு கட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்காமல் விமானம் மூலமாக விஜய் சென்னை சென்ற சம்பவம் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தனி விமானம் மூலம் நள்ளிரவில் கரூர் புறப்பட்டுச் சென்று, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. கரூர் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், கரூரில் இன்று கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்திற்கு வணிகர்கள் சம்பவங்களின் பேரமைப்பு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, கரூர் நகரில் இன்று அனைத்து வணிக நிறுவனங்களும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications