கரூர் துயரம்..10 மணி நேரம் பரபர விசாரணை! ஆனந்த் - ஆதவை 8 மணி வரை விடாத சிபிஐ! இன்றும் ஆஜராக உத்தரவு!
கரூர்: தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் தேர்தல் பிரச்சார வேளாண்மை பிரிவு செயலாளர் ஆதார் அர்ஜுனா ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து 10 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இரவு 8 மணிக்கு நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்றும் ( 25.11.26) அவர்கள் விசாரணைக்கு ஆஜராவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த செப். 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட இந்த துரதிர்ஷ்டவசமான நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது மட்டுமன்றி, 110 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். த
மிழக அரசியல் வட்டாரத்தை அதிர வைத்த இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகப் பொறுப்பில் உள்ள பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

கரூர் நெரிசல் வழக்கு
அதன்படி, கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், தேர்தல் மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுப்பணித்துறையின் சுற்றுலா மாளிகைக்குள் தற்காலிக முகாம் அமைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணையை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. இன்று காலை தொடங்கிய விசாரணை தொடர்ந்து 10 மணிநேரம் நீடித்து இரவு 8 மணிக்குப் பிறகே முடிவுக்கு வந்தது.
சிபிஐ விசாரணை
நீண்ட நேர விசாரணையில் சம்பவம் தொடர்பாக சிபிஐ மிக ஆழமான, விரிவான கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பும், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர் குரு சரணிடம் சிபிஐ அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், கூட்ட நெரிசலில் காயம் அடைந்தவர்களின் வீடுகளுக்கும் சிபிஐ அதிகாரிகள் நேரடியாக சென்று விசாரணை செய்தனர்.
ஆனந்த் ஆதார் அர்ஜுனா
இந்நிலையில், நேற்றைய விசாரணை முடிந்த பின்னரும், இன்று ( 25.11.26) மீண்டும் விசாரணை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர் சம்பவம் தொடர்பாக அடுக்கடுக்கான பல்வேறு கேள்விகளை எழுப்பிய சிபிஐ , இந்த துயர சம்பவத்துக்கு யார் தான் பொறுப்பேற்பது என்பது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பி அதற்கான பதிலை பெற்றதாக சொல்லப்படுகிறது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இதில் பல முக்கிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணை தொடர்ச்சி
கூட்டத்தை ஏற்பாடு செய்தது யார்?, கூட்ட மேலாண்மை, கூட்டம் நடந்த போது ஏற்பட்ட குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சுட்டிக்காட்டி சிபிஐ கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. நேற்று சுமார் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்றும் விசாரணை நடைபெற இருக்கிறது. இதில் மேலும் பல முக்கிய முடிச்சுகள் அவிழ்க்கப்படலாம் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications