அடிச்சாலும் புடிச்சாலும் களத்தில் செந்தில் பாலாஜி- விஜயபாஸ்கர்! புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் எங்கே?
கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில் களத்தில் முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அதிமுக- திமுக நிர்வாகிகள் என தொடர்ந்து இரவெல்லாம் காத்திருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வரும் நிலையில் தவெக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் அந்த இடத்தில் இல்லாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு அனுமதி வாங்குவது, போலீஸ் பாதுகாப்பு கோருவது எல்லாம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பார்த்துக் கொள்வதாக தெரிகிறது. மேலும் கூட்டத்திற்கான கட்டுப்பாடுகளையும் அவர்தான் விதிப்பார். அதில் குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் வரவேண்டாம். விஜய் வாகனத்தின் பின்னால் யாரும் வரவேண்டாம் என்பது போன்ற விதிகளையும் அவர் வகுத்து வருகிறார்.

நிர்மல் குமாரும் விஜய்யை ஏதாவது சொல்லிவிட்டால் வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிடுவார். ஆனால் கரூரில் 39 பேர் இறந்திருக்கும் நிலையில் சமூகவலைதளங்களில் விஜய் குறித்து விமர்சனம் எழுந்துள்ள நிலையில் இதுவரை யாருமே ஒரு ட்வீட் கூட போடவில்லை.
பெரிய ஸ்டாரா
கரூரில் இந்த சம்பவம் நடந்ததும் கரூர் அரசு மருத்துவமனைக்கு விஜய் வந்திருக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்தை விட இவர் என்ன பெரிய ஸ்டாரா, இவரை விட அவர்களுக்கு கூட்டம் கூடியிருந்தது. ஆனால் அவர்கள் மக்களோடு மக்களாகத்தானே பழகினார்கள். விஜய் மட்டும் ஏன் இன்னும் சினிமா நட்சத்திரமாகவே distance maintain செய்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக - திமுக உதவி
கரூரில் நடந்த கொடூரத்தின் போது ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு அதிமுக திமுகவினர் கைகளை கோர்த்துக் கொண்டு வழியை ஏற்படுத்தி களத்தில் இறங்கியிருந்தனர். அதுபோல் செந்தில் பாலாஜி, அதிமுகவின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் களத்தில் இருந்துக் கொண்டு இரவு முழுவதும் பணியாற்றினர்.
செந்தில் பாலாஜி
ஒரு கட்டத்தில் அங்கு விரைந்து வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூட கண் கலங்கி அழுதார். செந்தில் பாலாஜிக்கும் விஜய பாஸ்கருக்கும் மோதல் போக்கு இருந்திருந்தாலும் களத்தில் அவர்களை பார்க்க முடிந்தது. ஆனால் அங்கு தவெக நிர்வாகிகள் ஒருவர் கூட இல்லை.
பேட்ஜ்
ஏழை எளிய மக்கள், முதியோர்களுக்கு விஜய் பிறந்தநாளின் போது அவர்கள் போடும் சாப்பாட்டை தவிர அனைத்திலும் விஜய் கட்சியின் பேட்ஜையும் கழுத்தில் துண்டுகளையும் அணிந்திருந்த நிர்வாகிகள், நேற்று ஒருவர் கூட கரூர் மருத்துவமனை பக்கம் தலை வைத்து கூட படுக்கவில்லை.
அவசரம் காட்டிய விஜய்
கட்சியின் தலைவர் விஜய்தான் அவசர அவசரமாக சிறிதும் தார்மீக பொறுப்பே இல்லாமல் தப்பியோடிவிட்டார் என்றால் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோராவது மீட்பு பணிகளில் இருந்திருக்க வேண்டாமா? அதாவது மக்களோடு மக்களாக இருக்க மாட்டார்களாம், ஆனால் இவர்களுக்கு ஓட்டு போட்டு முதல்வர் சீட்டை தூக்கி கொடுத்துவிட வேண்டுமாம். என்ன நியாயம்?
யார் அரசியல்வாதி
அரசியல்வாதி என்பவர் மக்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்பவராக இருத்தல் வேண்டும். பாதுகாப்பு கருதி நேரடியாக இல்லாவிட்டாலும் (இந்த எண்ணமே தவறுதான்) அடுத்த கட்ட தலைவர்களையாவது விஜய் அனுப்பியிருக்க வேண்டும். கரூர் முழுக்க மரண ஓலங்கள் கேட்ட நிலையில் தவெக நிர்வாகிகள் மட்டும் வீடுகளுக்குள் ஒளிந்து கொண்டது என்ன மாதிரியான அரசியல் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவ விஜய்க்கு கரும்புள்ளிதான். அவர் தேர்தலில் நின்றாலும் இன்று பலியானவர்களின் குடும்பத்தினர் கூட வாக்களிக்க மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனம்.












Click it and Unblock the Notifications