கரூரில் சாலை நடுவே இருந்த சென்டர் மீடியனை எடுத்திருந்தால்... ஈஸியாக இருந்திருக்குமாம்! தவெக வாதம்
கரூர்: கரூரில் வேலுச்சாமிபுரத்தில் சாலை நடுவே இருந்த சென்டர் மீடியனை எடுத்துக் கொடுத்திருந்தால் பிரச்சாரத்திற்கு சுலபமாக இருந்திருக்கும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வாதத்தை முன் வைத்தார்.
கரூரில் தவெக பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன், நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் காவல் துறை தரப்பில் கோர்ட்டில் பல்வேறு விஷயங்கள் முன் வைக்கப்பட்டன.
அதில் கரூரில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் தடியடி நடத்தவில்லை. காலதாமதமாக வந்தது மட்டுமின்றி விஜய் வாகனம் ராங் ரூட்டில் சென்றது. இரு ஆம்புலன்ஸ்கள் வந்த போதும் விஜய் பேசிக் கொண்டிருந்தார்.
3 மணிக்கு விஜய் வந்திருந்தால் கூட்ட நெரிசல் ஏதும் நடந்திருக்காது என காவல் துறை தரப்பு தெரிவித்த போது நீதிபதி, நிர்வாகிகள் யாரும் தகவலை விஜய்க்கு சொல்லவில்லையா என தவெகவிடம் கேள்வி எழுப்பினார். மேலும் கூட்டம் அளவை கடந்துச் சென்றது என தெரிந்தும் நிர்வாகிகள் ஏன் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
அப்போது தவெக வழக்கறிஞரோ, கட்சிக்காரர்களை நாங்கள் தடுக்கலாம். ஆனால் பொதுமக்களை தடுக்க வேண்டியது காவல் துறைதான்.
அசாதாரண சூழல் இருந்தால் பரப்புரையை நிறுத்தலாம் என நிபந்தனை உள்ளது. அதை காவலர்கள் ஏன் செய்யவில்லை. அதிக கூட்டம் வரும் என்பது தெரிந்தும் காவலர்கள் கட்டுப்படுத்தவில்லை.
பரப்புரை இடத்தில் சாக்கடை குழி, வெறும் அட்டை வைத்தே அடைத்து வைக்கப்பட்டிருந்தது. கரூரில் விஜய்யின் கூட்டத்திற்கு வந்தது தவெகவினர் இல்லை, சாதாரண மக்கள். கூட்ட நெரிசலுக்கு பின்னால் அரசியல் சூழ்ச்சி உள்ளது.
கரூரில் வேலுச்சாமிபுரத்தில் சாலை நடுவே இருந்த சென்டர் மீடியனை எடுத்துக் கொடுத்திருந்தால் பிரச்சாரத்திற்கு சுலபமாக இருந்திருக்கும் என நீதிபதியிடம் தவெக வாதத்தை முன் வைத்தனர்.
அப்போது நீதிபதி பரத்குமார், "அதிக கூட்டம் வரும் என விஜய்க்கு சொல்லப்பட்டதா? அவரவர் உயிரைக் காப்பாற்ற அவரவர் ஓடுகிறார்கள். தவறு யார் மீது உள்ளது சொல்லுங்கள்" என கேட்டார். அதற்கு டிஎஸ்பியோ, " பரப்புரை வாகனம் குறிப்பிட்ட இடத்தை வந்தவுடன் போதும் வாகனத்தை நிறுத்துங்கள் என்றேன். ஆனால் ஆதவ் அர்ஜுனாதான் இன்னும் முன்னே செல்வோம் என்றார்.
முனுசாமி கோயில் பகுதியில் ஆனந்த் வாகனத்தை நிறுத்தி தாமதம் செய்தார். அங்கே கேரவன் உள்ளே விஜய் சென்று விட்டார். அங்கேயே விஜய்யை பார்த்திருந்தால் கூட்டம் கலைந்து சென்றிருக்கும். விஜயின் பரப்புரை வாகனம் முன்னே சென்றபோதுதான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications