கரூரில் இளையராஜா கச்சேரி! "நீ பொட்டு வச்ச தங்க குடம்" பாடிய போது பின்னணி திரையில் செந்தில் பாலாஜி
கரூர்: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு கரூருக்கு முதன் முதலாக வந்த செந்தில் பாலாஜி இசைஞானி இளையராஜாவின் மேடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவிதை வாசித்ததுடன், நீண்ட நேரம் அமர்ந்து இசைக் கச்சேரியை பார்த்து ரசித்தார்.
இந்த இசை நிகழ்ச்சியில் நீ பொட்டு வச்ச தங்க குடம் பாடலை இளையராஜா பாடிய போது பின்னால் உள்ள திரையில் செந்தில் பாலாஜியின் படம் ஒளிபரப்பப்பட்டதால் அவருடைய ஆதரவாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

இதன் மூலம் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி இல்லாவிட்டாலும் அவருக்கு தொண்டர்களின் அன்பும் ஆதரவும் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
கரூர் எம்எல்ஏ
கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், திமுக கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறை வழக்கில் நீதிமன்றத்தின் நெருக்கடி காரணமாக கடந்த வாரம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்ததால் அதில் கலந்து கொள்வதற்காக , கரூருக்கு வருகை தராமல் இருந்தார்.
பதவி ராஜினாமா
இந்நிலையில் பதவியை ராஜினாமா செய்த பிறகு கரூரில் தனியார் அமைப்பு ஒன்று நடத்திய இசைஞானி இளையராஜாவின் இசைக் கச்சேரிக்கு முதன் முதலாக வருகை தந்தார். மாவட்ட ஆட்சியர் தங்கவேல், காவல் கண்காணிப்பாளர் ஃபெரோஸ்கான் அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகளுடன் அமர்ந்து இசைக் கச்சேரியை கண்டுகளித்தார்.

மேடைக்கு சென்ற செந்தில் பாலாஜி
இதனை தொடர்ந்து பாடல்களுக்கு நடுவே மேடைக்கு சென்ற செந்தில் பாலாஜி இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். அப்போது, இளையாராவை பாராட்டும் விதமாக கவிதை வாசித்து, கரூரில் அடுத்த ஒரு ஆண்டிற்குள் மீண்டும் இளையராஜா மேடை நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும், அதற்கான தேதியையும் கேட்டுள்ளதாகவும், கரூரில் இளையராஜாவின் இசைக் கச்சேரி நடத்துவது தனது நீண்ட கால ஆசை என்றார்.
செந்தில் பாலாஜி பேசியது என்ன
இந்த கச்சேரியில் செந்தில் பாலாஜி பேசிய போது, செம்மொழி நிகழ்ச்சிக்கு செல்லுகிறத போது, திராவிட ஆட்சியின் முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பெற்று ஜூன் 2ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி கவிதை
இதன் மூலம் இசைஞானிக்கு பெருமை சேர்த்த முதல்வருக்கு நன்றிகள்.
இசைக்கு ஒரு உருவம் இருந்தால் அது இளையராஜா.
தூங்க வைக்கும் தாலாட்டாக
துணிவை தரும் தத்துவமாக
உள்ளம் வரம்பின் காதலாக
உருதுணையாக நிற்கும் நட்பாக
காயம் ஆறும் மருந்தாக
எல்லோருக்கும் எல்லாமாக
இசை என்றால் அது இசைஞானி என தமிழகத்திற்கும் தமிழ் மண்ணிற்கும் பெருமை சேர்த்திருக்கிறார். இவ்வாறு செந்தில் பாலாஜி கவிதை வாசித்தார்.
ஆரவாரம்
இந்த நிகழ்ச்சியை நீண்ட நேரம் அமர்ந்து செந்தில் பாலாஜி ரசித்தார். அப்போது நீ பொட்டு வைத்த தங்க குடம் என பாடல் வந்த போது பின்னால் உள்ள திரையில் நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்த செந்தில் பாலாஜியின் முகம் காட்டப்பட்டதால் அங்கு ஆரவாரம் எழுந்தது.
நீ பொட்டு வைத்த தங்க குடம்
ஊருக்கு நீ மகுடம்
என்ற இந்த பாடலால் செந்தில் பாலாஜிக்கு இன்றும் கொங்கு மண்டலமாக கரூரில் செல்வாக்கு உள்ளது என நிரூபிக்கப்படுகிறது.

செந்தில் பாலாஜி ட்வீட்
இசைஞானிக்கு வாழ்த்து சொல்லிய படங்களை தனது எக்ஸ்வலைதளத்தில் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ் மண்ணின் பெரும் பெருமை, தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞரால் இசைஞானி என பட்டம் சூட்டப்பட்டு, இன்று உலகத் தமிழ் உயிர்களின் உணர்வில் கலந்த உயர்ந்தவர் ஐயா இளையராஜா அவர்களின் இன்பமிகு இசை நிகழ்வை இன்று கரூரில் துவக்கி வைத்த போது கரூர் மாவட்ட காற்றில் தனது இசையை கலந்த இசைஞானிக்கு கரூர் மாவட்ட மக்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்து, லண்டனில் சிம்பொனி இசையமைத்த இசைஞானி அவர்களை பெருமைப்படுத்தும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் தலைமையில், வருகின்ற ஜூன் மாதம் 2-ஆம் தேதி, சென்னையில் மாபெரும் பாராட்டு விழா நடைபெறுகிறது என்பதையும் பேரன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்வை அற்புதமாக ஏற்பாடு செய்த திரு. அஜித் ராஜா அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications