சென்னை - கரூர்.. பிரியாணி கடை உரிமையாளர் வழக்கு.. வேலை பார்த்தவரால் சவுக்கு சங்கருக்கு புதிய சிக்கல்
கரூர்: கரூர் காந்திகிராமத்தை சேர்ந்த பிரியாணி கடை உரிமையாளரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் இருந்து அழைத்துவரப்பட்ட சவுக்கு சங்கரிடம் கரூர் போலீசார் இன்று விசாரணையை தொடங்கி உள்ளனர்.
கரூர் காந்திகிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் என்பவருடய மகன் கிருஷ்ணனுக்கு 43 வயது ஆகிறது. இவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார் . இவர் கடந்த ஜூன் 6ம் தேதி கரூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த 1 வருடத்திற்கு முன்பு எனக்கு சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் எனக்கு அறிமுகம் ஆனார். பின்னர் என்னிடம் அவர் ஆன்லைனில் முதலீடு செய்வது பற்றி கூறினார். அப்படி முதலீடு செய்தால் அதிகமாக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறினார்.

இதை உண்மை என்று நம்பி ரூ.7 லட்சம் பணம் கொடுத்தேன். ஆனால் பணம் பெற்றுக்கொண்டு விக்னேஷ் மோசடி செய்துவிட்டார் . அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அதன்பேரில், கரூர் டவுன் போலீசார் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், விக்னேஷ், சவுக்கு சங்கரின் இணையதளத்தில் தான் வேலை செய்து வந்ததாகவும், அப்போதுபணிபுரிந்ததாகவும், கிருஷ்ணனிடம் வாங்கிய பணத்தை சவுக்கு சங்கரிடம் கொடுத்ததாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இந்த வழக்கில் சவுக்கு சங்கரையும் சேர்த்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு குறித்து சவுக்கு சங்கரிடம் விசாரிக்க சென்னை புழல் சிறையில் இருந்து கரூர் டவுன் போலீசார் நேற்று முன்தினம் அழைத்து வந்தார்கள். பின்னர் கரூர் கிளைச்சிறையில் சவுக்கு சங்கரை அடைத்தார்கள்.
அதன்பிறகு சவுக்கு சங்கரை நேற்று காலை கரூர் கிளைச்சிறையில் இருந்து அழைத்து வந்து கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 நீதிபதி பரத்குமார் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அப்போது சவுக்கு சங்கரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் சவுக்கு சங்கரை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டார். இதனையடுத்து சவுக்கு சங்கரை கோர்ட்டில் இருந்து பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்றனர். இன்று முதல் ஆன்லைன் மோசடி தொடர்பாக விக்னேஷ் கூறிய தகவல்களை பற்றி போலீசார் விசாரிக்க உள்ளார்கள்
இதனிடையே சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சவுக்கு சங்கருக்கும் இந்த வழக்கிற்கும், எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. புழல் சிறையில் அவர் மிகவும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று குற்றம்சாட்டினார். சவுக்கு சங்கருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை கட்டவிழ்க்க கூட சிறை மருத்துவமனைக்கு அவரை யாரும் அழைத்துச் செல்லாமல் இருக்கிறார்கள். சிறையிலேயே கட்டை பிரித்து பார்த்தபோது, அவருக்கு கை வீங்கியுள்ளது. இன்றுவரை எக்ஸ்-ரே கூட எடுக்கவில்லை .சவுக்கு சங்கருக்கு சர்க்கரை நோய் உள்ளது. ஆனால் அவருக்கு அதற்கான உரிய உணவு வழங்கப்படுவதில்லை என்று கூறினார்.












Click it and Unblock the Notifications