விஜய் மீது காலி பாட்டிலை வீசியது நாங்கள் தான்.. கரூரில் உயிர் பிழைத்த நபர் பகீர்! என்ன நடந்தது
கரூர்: தவெக தலைவர் விஜய் நேற்று கரூரில் பிரச்சாரம் செய்தபோது அங்கு எதிர்பாராத விதமாகக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். விஜய் மீது யாரோ பாட்டில்களை தூக்கி வீசியதாகவும் அதுவே பிரச்சினைக்குக் காரணம் என நெட்டிசன்கள் சிலர் கூறினர். இதற்கிடையே இதில் உயிர் பிழைத்த ஒருவர், கூட்ட நெரிசலில் சிக்கியதால் அங்கிருந்த சிலரே தண்ணீர் கேட்டு விஜய் மீது காலி பாட்டில்களைத் தூக்கி வீசியதாகக் கூறியுள்ளார்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் 2026 சட்டசபைத் தேர்தலுக்காக மாநிலம் முழுக்க சனிக்கிழமைகளில் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி நேற்றைய தினம் விஜய் கரூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாகக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

பிரச்சாரக் கூட்டம்
இந்தியாவிலேயே அரசியல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்தளவுக்கு அதிக உயிரிழப்புகள் வேறு எங்கும் ஏற்பட்டதே இல்லை. பொதுமக்கள் அனைவரும் ஆம்புலன்ஸ்கள் மூலம் மீட்கப்பட்டு அருகே இருந்த மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் காயமடைந்தோர் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் துயரம் தொடர்பாக இணையத்தில் பல்வேறு வீடியோக்கள் பரவி வருகிறது. மேலும், தவெகவினரும் நெட்டிசன்களும் பலவிதக் கருத்துகளைக் கூறி வருகிறார்கள். அப்படித் தான் ஒரு சிலர், விஜய் மீது யாரோ காலி பாட்டில்களைத் தூக்கி வீசியதாகவும் இதன் மூலமாகவே இந்தக் கூட்டத்தில் ஏதோ சதி நடந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது என்றும் சொல்லி சில வீடியோக்களை பரவி வருகிறார்கள்.
என்ன நடந்தது
இதற்கிடையே அங்குக் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததாகவும் இதனால் தாங்களே காலி பாட்டில்களைத் தூக்கி எறிந்து உதவி கேட்டதாகவும் இதில் உயிர் பிழைத்த ஒருவர் பேட்டி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் சன் நியூஸுக்கு அளித்த பேட்டியில், "விஜய் பேச ஆரம்பிக்கும் முன்பே பின்னால் இருந்த கூட்டம் முன்னால் வர ஆரம்பித்துவிட்டது. இதனால் எங்களாலும் வெளியே வர முடியவில்லை.. கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க மூச்சுத் திணறல் ஏற்படத் தொடங்கியது. எங்குமே நகர முடியவில்லை. இதனால் ஒருவர் மீது ஒருவர் விழுக ஆரம்பித்தார்கள்.
தடுமாறி விழுந்தோம்
நாமக்கல்லில் எந்தளவுக்குக் கூட்டம் சேர்ந்ததோ அதே அளவுக்குக் கூட்டம் கரூரிலும் சேர்ந்து இருந்தது. மக்களுக்கு நிற்கக்கூட இடமில்லை. யாராலும் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. விஜய் வந்தவுடன் அவரை பார்க்க எல்லாரும் சட்டென முன்னால் வர ஆரம்பித்துவிட்டனர். அதனால் அப்படியே எல்லாரும் கீழே விழ ஆரம்பித்துவிட்டோம்.
நாங்கள் பார்க்கிறோம்.. எல்லாரும் தள்ளிக் கொண்டு வர ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் தடுமாறி விழுந்துவிட்டோம். ஆனால், அதன் பிறகு எழ முடியவில்லை. எல்லாரும் மிதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பிறகு பெரிய போராட்டத்திற்குப் பிறகு அங்கிருந்த யாரோ ஒருவரின் கையை பிடித்தே எழுந்து வந்தோம்" என்றார்.
காலி பாட்டில்
மேலும், விஜய் தண்ணீர் கூட தரவில்லையே என்கிறார்களே என்று செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு அவர், "இல்லை.. விஜய் தண்ணீரைத் தூக்கிப் போட்டார். முதலில் அவருக்கு அங்கே என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. இதனால் அருகே இருந்தவர்கள் சேர்ந்து காலி வாட்டர் பாட்டில்களை அவர் மீது தூக்கி அடிக்க ஆரம்பித்தோம். முதலில் அவருக்கு என்னவென்று புரியவில்லை. ஆனால், நிலைமையை உணர்ந்த உடனேயே தண்ணீரைத் தூக்கி வீசி உதவினார்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications