கிருஷ்ணகிரியில் காலையிலேயே ஜேசிபியுடன் அதிகாரிகள்.. குவிந்த போலீஸ்.. இடித்து தள்ளப்பட்ட 26 வீடுகள்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள ஜெகதாப் என்ற கிராமத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 26 வீடுகள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆக்கிரமிப்பை அகற்றும் போது கடும் எதிர்ப்பு வர, நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் வருவாய் துறையினர் வீடுகளை இடித்து அகற்றினார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த ஜெகதாப் என்ற கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அந்த கிராமத்தில் பொதுப்பாதையாக இருந்த நிலங்களை ஆக்கிரமித்து சிலர் வீடுகள் கட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த நாசன் என்பவர் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து ஜெகதாப் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதன்பேரில் கடந்த 2024ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகள் சென்றனர். அப்போது அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற விடாமல் அதிகாரிகளை தடுத்தனர். இதனால் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி கிருஷ்ணகிரி தாசில்தார் வளர்மதி தலைமையிலான வருவாய்துறையினர் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற சென்றுள்ளார்கள். அதில் ஆக்கிரமிப்பிலுள்ள ஒரு வீட்டின் முகப்பை பொக்லைன் மூலம் இடித்தனர். அப்போது அங்கு திரண்ட மக்கள், தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வரும் போது எல்லாம், மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது, சட்டவிரோதம் என எச்சரிக்கை விடுத்தார் அப்போது, 'வீடுகளின் ஆக்கிரமிப்புகளை அளந்து குறியீடு வைத்து செல்லுங்கள் ஒரு வாரத்தில் ஆக்கிரமிப்புகளை நாங்களே இடித்து அகற்றி கொடுக்கிறோம்' என பொதுமக்கள் அவர்களிடம் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் அவகாசம் அளித்து அதிகாரிகள் சென்றனர். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்ற உத்தரவிட்டது. இதன்படி இன்று மீண்டும் ஜெகதாப் கிராமத்திற்கு சென்றனர். அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 26 வீடுகளை வருவாய் துறை அதிகாரிகள் அடியோடு இடித்து அகற்றினார்கள். அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.













Click it and Unblock the Notifications