கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி.. 11 மாவட்டங்களுக்கு ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் அறிவிப்பு
கிருஷ்ணகிரி: கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு உள்பட 11 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பிரிவில் பணிபுரிய ஆட்சேர்ப்பு முகாம் கிருஷ்ணகிரியில் வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது. ஆன்லைன் பொது நுழைவு தேர்வில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களை அக்னிவீர் கிளார்க், பொது பணிப்பிரிவு (அனைத்து ஆயுதப்பிரிவு), தொழில்நுட்ப பிரிவு, டிரேட்ஸ்மேன் மற்றும் மகளிர் ராணுவ காவல்படை ஆகிய பிரிவுகளில் சேர்ப்பதற்காக இந்த ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
கோவை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வருகிற 25-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 7-ந் தேதி வரை ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆன்லைன் பொது நுழைவு தேர்வில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களை அக்னிவீர் கிளார்க், பொது பணிப்பிரிவு (அனைத்து ஆயுதப்பிரிவு), தொழில்நுட்ப பிரிவு, டிரேட்ஸ்மேன் மற்றும் மகளிர் ராணுவ காவல்படை ஆகிய பிரிவுகளில் சேர்ப்பதற்காக இந்த ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இதில் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி, தர்மபுரி ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ள சம்பந்தப்பட்ட ஆட்சேர்ப்பு முகாமின் அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ள அனைத்து ஆவணங்களையும் கட்டாயமாக கொண்டு வர வேண்டும்.
ஆவணங்களின் தேவையான படிவங்களும் அந்த அறிவிப்பிலேயே வழங்கப்பட்டு உள்ளன. முழுமையான ஆவணங்கள் இல்லாமல் அல்லது தவறான படிவத்தில், குறிப்பாக உறுதிமொழி பத்திரத்தை தவறாக கொண்டு வரும் எந்த வொரு விண்ணப்பதாரரும் ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்.
அக்னிவீர் அனைத்து பிரிவுகளுக்கும் அனுமதி சீட்டுகள் ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளன. ஏதேனும் சந்தேகம், விளக்கம் அல்லது உதவி தேவைப்பட்டால் விண்ணப்பதாரர்கள் கோவையில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். ராணுவ ஆட்சேர்ப்பு செயல்முறை முழுமையாக தானியங்கி முறையிலும், நியாயமான, வெளிப்படையான முறையிலும் நடைபெறுகிறது. யாரையும் தேர்ச்சி பெற செய்வதாகவோ அல்லது ராணுவத்தில் சேர்த்து விடுவதாகவோ கூறும் தரகர்கள், மோசடி நபர்களிடம் விண்ணப்பதாரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கடின உழைப்பு, முறையான தயாரிப்பு மட்டுமே தகுதி மற்றும் தரவரிசையின் அடிப்படையில் தேர்வை உறுதி செய்யும். தரகர்கள், முகவர்களுக்கு ராணுவ ஆட்சேர்ப்பில் எந்த பங்கும்பில்லை. எனவே இதுபோன்ற தரகர்கள் அல்லது நிறுவனங்களின் ஆசை வார்த்தைகளில் விண்ணப்பதாரர்கள் சிக்கி கொள்ள வேண்டாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications
