15 நாள்தான் டைம்! உள்ளே இறங்கும் SIT.. கிருஷ்ணகிரி பலாத்காரம் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பத்தில் தனியார் பள்ளி பயிற்சி முகாமில் மாணவிகள் சிலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை துரிதமாக மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திக்குப்பத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் சார்பில் கடந்த 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையில் தேசிய மாணவர் படை (என்சிசி) முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளியைச் சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பள்ளி வளாகத்திலேயே தினமும் தங்கி முகாமில் பங்கேற்றனர்.

இந்த நிலையில், என்சிசி முகாமிற்குச் சென்ற 12 வயதுடைய 8-ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த 8-ம் தேதி அதிகாலை பள்ளி ஆடிட்டோரியத்தில் சக மாணவியருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3 மணி அளவில், என்சிசி பயிற்சியாளரான காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த சிவராமன் (30) என்பவர், மாணவியை தனியே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பள்ளியின் முதல்வர் சதீஷ்குமாரிடம் தெரிவித்துள்ளார். அவர் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் எனக் கூறியதாகத் தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி இரவு மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனது தாயாரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். உடனே அவரது பெற்றோர் அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்தச் சம்பவத்தில் என்.சி.சி பயிற்சியாளர் சிவராமன், தாளாளர், முதல்வர் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். என்சிசி பயிற்சியாளர் சிவராமன் நாம் தமிழர் கட்சி முன்னாள் இளைஞர் பாசறையின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர். இந்த என்சிசி முகாமில் 13 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நடந்த என்.சி.சி. முகாமில், 8ஆம் வகுப்பு மாணவி பயிற்சியாளரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவமும், அதற்கு பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், சக பயிற்சியாளர்கள் உடந்தையாக இருந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை 15 நாளில் விசாரித்து முடிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க ஐஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வழக்குகளின் விசாரணையை விரைந்து முடித்து 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பது குறித்து உரிய பரிந்துரைகளை அளித்திட சமூகநலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் பல்நோக்கு குழு அமைத்திடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் "கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியில், NCC திட்டத்திற்கு மாணவர்களை தயார்ப்படுத்துவற்கான முகாம் பள்ளி நிர்வாகத்தால் நடத்தப்பட்டது. இந்த முகாமில், போலியான பயிற்றுநர்கள் கலந்துகொண்டு, அங்கு பயிலும் மாணவிகள் சிலரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட NCC பயிற்றுநர்கள் ஆறு பேரில், ஐந்து பேரும், இந்த சம்பவத்தைக் காவல்துறைக்குத் தெரிவிக்காமல் மறைத்த பள்ளியின் நிர்வாகத்தினர் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், வழக்கின் முக்கிய எதிரி சிவராமனுக்கு அடைக்கலம் கொடுத்து போலீஸாரின் கைது நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்ட இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்" என போலீஸாரின் கைது நடவடிக்கை குறித்து குறிப்பிடப்பட்டள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து விரைவாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. "மேற்கூறிய போலியான NCC பயிற்றுநர்கள் இதே போன்று, மேலும் சில பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இத்தகைய பயிற்சி வகுப்புகளை மேற்கொண்டதாகத் தெரியவந்துள்ளது. இந்தப் பள்ளிகள், கல்லூரிகளிலும் மேற்கூறிய பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சம்பவங்களைப் பற்றி முழுமையான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், காவல்துறை தலைவர் பவானீஸ்வரி ஐபிஎஸ் தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு (SIT) ஒன்றை அமைத்திட முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணையை துரிதமாக மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்லாகத்தில் நடைபெறாமல் தடுக்கும் விதமாகவும் முக்கிய முடிவு ஒன்றை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது.
"மேலும், இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களோடு கலந்தாலோசித்து, அவர்களின் நலன் காத்திட தேவையான நடவடிக்கைகள் குறித்தும், இந்த சம்பவம் ஏற்படக் காரணமாக இருந்த சூழ்நிலைகள் குறித்து ஆராய்ந்து, இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பது குறித்தும், உரிய பரிந்துரைகளை அளித்திட, சமூகநலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஐஏஎஸ் தலைமையில் ஒரு பல்நோக்கு குழு (Multi Disciplinary Team - MDT) ஒன்றை அமைத்திடவும் ஆணையிட்டப்பட்டுள்ளது.
இக்குழுவில், மாநில சமூக பாதுகாப்பு ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் ஐஏஎஸ், பள்ளிக்கல்வி இயக்குநர் லதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த், மனநல மருத்துவர்கள் பூர்ண சந்திரிகா மற்றும் சத்யா ராஜ், காவல்துறை ஆய்வாளர் லதா, குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர் வித்யா ரெட்டி உறுப்பினர்களாக இருப்பார்கள்.
மேற்கூறிய சம்பவம் குறித்த விசாரணையை 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில், வழக்குகளின் விசாரணையை விரைந்து முடித்து 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, கடும் தண்டனையை பெற்றுத்தர வேண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications