மாப்பிள்ளை திருமணத்தை நிறுத்திய குடிகார பிரண்ட்ஸ்! கிருஷ்ணகிரியில் கிறுகிறுக்க வைத்த சம்பவம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே மாப்பிள்ளையின் நண்பர்கள் போதையில் மணமேடைக்குச் சென்று மணப்பெண்ணை நடனமாடச் சொன்னதால் கைகலப்பு ஏற்பட்டு திருமணமே நின்று போன சம்பவம் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த காந்திகுப்பம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கும் காவேரிபட்டினம் அருகே உள்ள கனகபுதூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களது திருமணம் காவேரிபட்டினத்தில் கடந்த 27ஆம் தேதி நடப்பதாக இருந்தது. திருமணத்திற்கு முதல் நாள் 26ஆம் தேதி அந்த மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்வு நடந்தது. இந்த திருமண நிகழ்விற்காக உறவினர்கள், நண்பர்கள் வந்திருந்தனர்.
இரவு 10 மணிக்கு மேல் மாப்பிள்ளையின் நண்பர்கள் சிலர் மதுபோதையில் மண்டபத்திற்கு வந்து நடனமாடியதாக தெரிகிறது. இதையடுத்து மேடையில் ஏறி மாப்பிள்ளையை நடனமாட சொன்னார்களாம். பின்னர் அவரது அருகில் அமர்ந்திருந்த மணப்பெண்ணையும் நடனமாடச் சொன்னதாக சொல்லப்படுகிறது.
அவர் வேண்டாம் என மறுத்தும், அவரை நடனமாட வற்புறுத்தியதாக தெரிகிறது. அந்த பெண்ணோ, தனக்கு நடனமாட விருப்பம் இல்லை என கூறியும் அவரை நண்பர்கள் நடனமாட அழைத்தனர். மேலும் பெண்ணின் உறவினர்களும் "எங்கள் வீட்டு பெண்ணை நடனமாட சொல்வது தவறு" என நடனமாடியவர்களையும் கண்டித்ததாக தெரிகிறது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு பெண் வீட்டாரை, மணமகனுடன் வந்தவர்கள் தாக்கியதாக சொல்லப்படுகிறது. திருமணத்திற்கு முன்பே இப்படி செய்கிறார்களே, திருமணமானால் என்னென்ன செய்வார்கள் என கருதிய அந்த பெண், அந்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய மறுத்தார்.
எனக்கு திருமணமும் வேண்டாம், இந்த மாப்பிள்ளையும் வேண்டாம் என கூறி மணப்பெண் எழுந்து சென்றதால் திருமணம் நின்று போனது. இதையடுத்து இரவோடு இரவாக மணமக்களை வாழ்த்து வைக்கப்பட்ட பேனர்கள் நீக்கப்பட்டன. உறவினர்களும் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். அடுத்த நாள் முகூர்த்தத்திற்கு வந்தவர்கள் மண்டபம் பூட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதை விசாரித்த போதுதான் வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்தது எல்லாம் தெரியவந்தது.
மது நாட்டுக்கும் வீட்டிற்கும் கேடு என எழுதியிருப்பார்கள். அது போல் பேச்சிலர் பார்ட்டி வைத்த மாப்பிள்ளைக்கு அந்த குடிகார நண்பர்கள் ஆப்பு வைத்துச் சென்றுவிட்டனர் என்றுதான் கூற வேண்டும். "வீட்டை கட்டிப்பார், திருமணத்தை செய்து பார்" என்பார்கள். திருமணங்கள் பல்வேறு காரணங்களுக்காக நின்று போயுள்ளன.
கேட்ட வரதட்சணை கொடுக்காதது, மணப்பெண்ணோ, மணமகனோ மண்டபத்தை விட்டு ஓடிச் சென்றது, சப்பாத்திக்கு சால்னா வைக்காதது, மாப்பிள்ளை படிக்காதது, குடித்துவிட்டு மாப்பிள்ளை மணவறை வந்தது, திருமண பத்திரிகையில் முக்கியமானவரின் பெயர் போடாதது உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக திருமணங்கள் நின்றுள்ளன. அந்த வகையில் குடியை வாங்கிக் கொடுத்த மாப்பிள்ளையின் நண்பர்களால் அவரது குடியே கெட்ட சம்பவம் தற்போது நடந்துள்ளது.
பொதுவாக திருமணங்களில் வரவேற்பு நிகழ்ச்சியின் இரவு மாப்பிள்ளையின் நண்பர்களுக்கு மது விருந்து அளிக்கப்படும். அவர்கள் அறையில் அமர்ந்து குடித்துவிட்டு மட்டையாகிவிடுவர். அதிகாலையில் குளித்து முடித்து பக்காவாக ரெடியாகி பந்தியில் போய் பாயாசத்தை ஊற்றுவதை கவனித்துக் கொள்வர். ஆனால் இந்த நபருக்கு கிடைத்த நண்பர்களோ இப்படி அவரது வாழ்க்கையையே முடித்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications