ஓசூரில் நாய்க்கடிக்கு சிகிச்சை எடுக்க தவறிய எட்வின் பிரியன்.. எந்த பெற்றோரும் பார்க்கக் கூடாத கோலம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த குப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தின்னூரை சேர்ந்த எட்வின் பிரியன் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தெருநாய் ஒன்று கடித்தது.நாய்க்கடிக்கான சிகிச்சையையும் எடுக்கவில்லை. தடுப்பூசியும் போட்டு கொள்ளவில்லை. கடைசியில் அந்த நாய்க்கடி அவருக்கு எமனமாக மாறியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த குப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தின்னூரை சேர்ந்த விக்டர் பாபு என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மனைவி அந்தோணியம்மாள். இவர்களின் மகன் எட்வின் பிரியனுக்கு 23 வயது ஆகிறது எம்.பி.ஏ. பட்டதாரியான எட்வின் பிரியன், தளி அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்திருக்கிறார்.

இவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த பகுதியில் ஒரு தெருநாய் கடித்தது. இதை அவர் யாரிடமும் சொல்லவில்லை. மேலும் நாய்க்கடிக்கான சிகிச்சையையும் எடுக்கவில்லை. தடுப்பூசியும் போட்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் அவரது நடவடிக்கையே அடியோடு மாறியிருந்தது. அடிக்கடி எச்சில் துப்பியவாறும், சத்தம் போட்டு அலறியவாறும் இருந்தாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை கக்கதாசத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.
தொடர்ந்து பாதிப்பு அதிகமாக இருந்ததால் அவர் தளியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு நாய்க்கடிக்கான ரேபிஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக இரவு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட எட்வின் பிரியன் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
எட்வின் பிரியன் நாய்க்கடியால் உயிர் இழந்துள்ள நிலையில், சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினர் மற்றும் அவருடன் இருந்த உறவினர்கள் என 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று ஓசூர் அரசு மருத்துமனையில் ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டது. ஓசூரில் நாய்க்கடிக்கு சிகிச்சை எடுக்க தவறிய வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஐந்து மாதங்களில் ரேபீஸ் பாதிப்பு என்பது தமிழகத்தில் மிக அதிகமாகி வருகிறது. ரேபீஸ் பாதித்த தெருநாய்கள் கடித்தாலோ அல்லது நக்கினாலோ அல்லது நகத்தை வைத்து கீறினாலோ அல்லது கடுமையாக சதையை கடித்தாலோ உடனே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுவது நல்லது. நாய்கள் கடிக்க வந்தால் அமைதியாக ஒதுங்கி செல்லாமல் அவற்றை எதிர்கொண்டால் மட்டுமே தப்பிக்க முடியும் என்கிறார்கள் நாய்கடியால் பாதிக்கப்பட்டவர்கள்.
நாய் வந்து நம்மை கடிக்க பாய்கிறது என்றால், அதை பலமாக எதிர்கொண்டால் பயந்து ஓட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள். பொதுவாக நாய்கள், குழந்தைகள், வயதானவர்கள் , பெண்களை குறிவைக்க காரணம், அவர்கள் எதிர்த்து சண்டை போடாமல் பயந்து அலறுவது தான் காரணம் என்கிறார்கள். நாய்கள் அதிகம் இருந்தால் குழந்தைகளை தனியாக நடந்து வர அனுமதிக்க வேண்டாம்.
ஏனெனில் நமது நாட்டில் நாய்கள் பிரச்சனையில் சரியான தடுப்பு நடவடிக்கைகளை அரசுகள் இன்னும் எடுக்கவில்லை.. நாய்களை கொல்லக்கூடாது என்று சட்டம் உள்ளது. பாதித்த நாய்களை குடும்ப கட்டுப்பாடு செய்து மீண்டும் அதே இடத்தில் விட வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது. நாய்கள் கருத்தடை விவகாரத்தில் போர்க்கால அடிப்படையில் அரசுகளும் பெரிதாக எடுக்கவில்லை என்கிறார்கள் பொதுமக்கள். அரசுகள் சட்டம் போட்டு, முறையான நடவடிக்கை எடுக்காத வரை இந்த பிரச்சனைக்கு தடுப்பூசியும் பாதுகாப்பாக சென்றுவருவதுதான் வழி என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.












Click it and Unblock the Notifications