கிழிஞ்சது கிருஷ்ணகிரி.. ஒன்னும் புரியல.. அரசு பஸ் வேற பின்னால போகுது.. தேன்கனிக்கோட்டை ரோட்டில் பரபர
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டையில் நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் வீடியோவாக வெளியாகி, பரபரப்பை கூட்டி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் வெயில் கொளுத்தி வரும்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் அனலடித்து வருகிறது.. அந்தவகையில், தேன்கனிக்கோட்டையின் வனப்பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது... எனவே, அங்குள்ள நீர்நிலைகள் முற்றிலும் வறண்டுள்ளன.

தேன்கனிக்கோட்டை: அந்த பகுதியிலுள்ள இலை, தழைகளும், காய்ந்து சருகாகிவிட்டது.. இதனால், வன விலங்கினங்கள் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்ய துவங்கிவிட்டன.. குறிப்பாக யானைகள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. இதனால், பயிர் சேதம் ஏற்படுவதோடு உயிர் சேதமும் அதிகரித்துள்ளது.
அந்தவகையில், நேற்றுகூட ஒரு சம்பவம் நடந்துள்ளது.. தேன்கனிக்கோட்டையிலிருந்து பெட்டமுகிலாளம் என்ற மலை கிராமத்திற்கு, அரசு பஸ் ஒன்று, 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது..
அரசு பஸ்: அய்யூர் காட்டுப்பகுதியில், சாமி ஏரி அருகே சென்றபோது, திடீரென சாலையின் குறுக்கே காட்டு யானை ஒன்று வந்து நின்றது. ஆடி அசைந்து சாவகாசமாக பஸ்ஸை நோக்கி அந்த யானை வந்தது.. இதைப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்த டிரைவர் தீபக்குமார், திடீரென பிரேக் போட்டு, பஸ்சை நிறுத்திவிட்டார்.
ஆனால், அந்த யானை அங்கிருந்து போகவேயில்லை.. நடுரோட்டிலேயே வாக்கிங் போய் கொண்டிருந்தது.. இதனால், அரசு பஸ் உட்பட அந்த வழியாக வந்த அனைத்து வாகன ஓட்டிகளுமே, திகைத்துபோய் செய்வதறியாமல் திகைத்தனர். அப்போது, திடீரென அந்த யானை ஆக்ரோஷத்துடன் பஸ்சை நோக்கி பாய்ந்து வந்தது. இதனால், பயணிகள் பீதியில் அலறி துடித்தார்கள்..
டிரைவர்: டிரைவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. ஆனாலும், யானையிடமிருந்து பயணிகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, பஸ்சை ரிவர்ஸ் கியர் போட்டு, பின்புறமாக ஓட்டினார்.. இத்தனைக்கும் மிகவும் அபாயகரமான மலைப்பாதையில் அந்த பஸ் வந்தது.. கிட்டத்தட்ட அரை கி.மீ. தூரத்துக்கு பின்னோக்கியே பஸ்ஸை ஓட்டினார் டிரைவர்.. அப்போதும் அந்த யானை விடவில்லை.. பஸ்சை துரத்திக்கொண்டே வந்ததால், பயணிகள் கத்தி கூச்சலிட்டு கொண்டேயிருந்தார்கள்.
அப்போது, சாமி ஏரி திடீரென நடுவே குறுக்கிட்டது... ஏரியில் தண்ணீரை பார்த்ததுமே, தாகத்திலிருந்த அந்த யானைக்கு குஷியாகிவிட்டது.. உடனே பஸ்ஸை துரத்துவதை விட்டுவிட்டு, ஏரியை நோக்கி ஓட்டம் பிடித்து, தண்ணீருக்குள் போய் நின்றுகொண்டது.. இதை பார்த்ததும்தான், பஸ்சில் இருந்தவர்களுக்கு உயிரே திரும்பி வந்தது போலாயிற்று. அதற்கு பிறகு, கியரை வேகமாக மாற்றி, ஸ்பீடு எடுத்தார் டிரைவர்...
வீடியோ: மரண பீதியில் இருந்தாலும், செல்போனில் பயணிகள் இந்த காட்சியை வீடியோ எடுத்து கொண்டார்கள்.. இதுதான் சோஷியல் மீடியாவிலும் பரவிவருகிறது. சாமர்த்தியமாக செயல்பட்டு, பஸ்ஸில் ரிவர்ஸ் கியர் போட்ட, அரசு பஸ் டிரைவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications