கிருஷ்ணகிரியே துள்ளுது.. யார்னு பார்த்தீங்களா.. விழுந்து விழுந்து.. ஆமா, அதென்ன கையில்? ஒரே ஆச்சரியம்
கிருஷ்ணகிரி: இந்து - முஸ்லிம் மக்களின் ஒற்றுமை காலகாலத்துக்கும் இறுக்கமாகவே பயணித்து வருகிறது என்பதற்கு மற்றொரு உதாரண சம்பவம் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது.
இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை வந்தாலே, திருப்புவம் முதுவந்திடல் கிராமமாக இருந்தாலும்சரி, தஞ்சாவூர் காசவளநாடு புதூர் கிராமமாக இருந்தாலும் சரி, களைகட்டிவிடும். இங்குள்ள இந்துக்கள் மிக சிறப்பாக மொகரம் பண்டிகையை இங்கு சிறப்பாக கொண்டாடுவார்கள்.

பண்டிகைகள்: ரம்ஜான், மொகரம், தீபாவளி என 2 மத பண்டிகைகளையும், இங்குள்ள முஸ்லிம்களும், இந்துக்களும் கொண்டாடுவது வழக்கம். அறுவடையாகட்டும், திருமணம், தொழில் எதுவானாலும் சரி, பள்ளிவாசலில் வந்து அனுமதி கேட்டபிறகுதான் அங்குள்ள இந்துக்கள் அவைகளை தொடங்குவார்கள்..
பொதுவாக இஸ்லாமியர்கள் வேண்டுதல் முறைகள் கடுமையாக இருக்கும் என்பதால், இந்துக்களும் தங்களை வருத்தி கொண்டு தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்துவார்கள்.. இதற்காக பள்ளிவாசலில் காப்பு கட்டி ஆண்களும், பெண்களும் ஒரு வாரம் விரதம் இருப்பார்கள்.. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் விறகு கட்டைகளை தானமாக வழங்குவார்கள்.. பள்ளி வாசல் முன்பாக, மிகப்பெரிய அளவில் குழி வெட்டி, அதிகாலையில் கண்மாயில் நீராடிய பிறகு, ஆண்கள் வரிசையாக 3 முறை தீக்குழி இறங்குவார்கள்.
கடந்த மாதம்கூட, கடலூரில் ஒரு சம்பவம் நடந்தது.. கடலூர் முதுநகரில் பிரசித்தி பெற்ற ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலுக்கு திடீரென 2 முஸ்லிம் பெண்கள் வந்தனர்.. அதில் ஒரு பெண், கையில் குழந்தையை தூக்கி கொண்டு வந்திருந்தார். கோயிலுக்குள் நுழைந்த இந்த 2 பெண்களும், அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர்.
அம்மன் வழிபாடு: அம்மன் அருகே நின்றுகொண்டு நீண்ட நேரம் சாமி கும்பிட்டனர்.. பிறகு, அம்மனிடம் மண்டியிட்டு நமஸ்காரம் செய்து, மறுபடியும் வழிபாடு செய்தனர்.. அதில் ஒரு பெண் தன்னுடைய குழந்தையையும் வழிபாடு செய்ய வைத்தார்.. இந்த காட்சிகள்தான் இணையத்தில் வீடியோவாக வைரலானது.
அதேபோல, மணப்பாறையிலும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.. வளநாட்டில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் புனரமைப்பு பணிகளுக்கு பிறகு, கும்பாபிஷேகம் நந்தபோது, திருக்கல்யாண வைபவத்திற்காக, இஸ்லாமியர்கள் மலர்மாலைகள், தேங்காய், பழங்கள், உப்பு, அரிசி, பருப்பு, நெய் மற்றும் பீரோ என மொத்த சீர்வரிசையையும் ஊர்வலமாக கொண்டு வந்து தந்திருந்தனர். இதோ இப்போதுகூட விநாயகர் சதுர்த்திக்கு ஒரு ஆச்சரிய சம்பவம் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது.
பிரசாதங்கள்: தமிழகத்தில் உள்ள இந்துக்களில் பெரும்பாலானோர், தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து, அந்த பிரசாதங்களை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு தருவது வழக்கம்..
இந்நிலையில், கிருஷ்ணகிரியில் உள்ள இஸ்லாமியர்கள் சிலர், சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வாங்கி, அவற்றுடன் பூஜைக்கு தேவையான பூமாலை, பழங்கள் போன்றவற்றை வைத்து, இந்துக்களின் வீடுகளுக்கு நேரிலேயே கொண்டு சென்று வழங்கினார்கள்.

வீடு வீடாக, விநாயகர் சிலைகளை கைகளில் ஏந்திக்கொண்டு, இந்துக்களின் வீடுகளில், இஸ்லாமிய சகோதரர்கள் வழங்கி சென்றது காண்போரை சிலிர்க்க வைத்தது.. மக்களிடையே மத மோதல்களை ஏற்படுத்தி அதன் மூலம் லாபம் அடைய முயற்சிப்பவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
ஈரம் மனம்: எவ்வளவுதான் இடர்பாடுகளையும், இன, மத ரீதியான பிளவுகளையும் ஒரு சில குரூரர்கள் கட்டவிழ்த்து விட்டாலும்.. ஈரம் கசியும் மனசு இங்கு இருக்கும்வரை.. சகிப்புத்தன்மையையும், மத நல்லிணக்கத்தையும், நம்மிடமிருந்து யாராலும் ஒருபோதும் பிரித்து விட முடியாது என்பதைதான் இந்த இஸ்லாமிய - இந்துமத உணர்வுகள் நாட்டுக்கு பறைசாற்றி கொண்டிருக்கின்றன... தொடர்ந்து தழைத்தோங்கட்டும் மதசகிப்புத்தன்மையும், மனிதநேயமும்... அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்.. !!












Click it and Unblock the Notifications