கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் ரூ.920 கோடி வசூல்! ஆனா ரோடு? ரூ.1 கோடி அபராதம் வாங்கி தந்த பைக் பிரியர்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. பொதுவாக, சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதில் மட்டும் குறியாக இருந்தால் போதுமா? அந்தக் கட்டணத்தை செலுத்தி செல்லும் மக்களுக்கு சாலை எப்படி இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டாமா? கிருஷ்ணகிரியில் நடந்த இந்த விவகாரம், சுங்கச்சாவடி நிர்வாகத்துக்கே ரூ.1 கோடி அபராதத்தை வாங்கி தந்துவிட்டது.. அதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்..!!
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு, 55 வயதாகிறது.. இவர் ஓசூரில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தினமும் பைக்கில் தான் வேலைக்கு சென்று வருவார்.. அப்படி தினமும் அந்தச் சாலையில் பைக்கில் செல்லும்போது, கிருஷ்ணகிரி சுங்கச்சாவடிக்கு சாலை சரியாக பராமரிக்கப்படாததை கவனித்துள்ளார்.

அதுமட்டுமல்ல, அந்த சாலையின் நிலை குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சாலை பராமரிப்பு தொடர்பான விவரங்களை கேட்டுப் பெற்றார்.. அதில் கிடைத்த தகவல்களைப் பார்த்த பிறகு, சாலை பராமரிப்பு சரியாக நடக்கவில்லை என்று கூறி, கடந்த ஜனவரி மாதம் கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி
இந்தப் புகாரை ஆணைய தலைவர் ராஜா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, உண்மையில் சாலையின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை நேரில் பார்த்து அறிக்கை அளிக்க, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையர் பிரியா, கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி எல்லைக்குள் வரும் பகுதிகளில் ஆய்வு செய்தார்.
அந்த ஆய்வில் சாலை பராமரிப்பு தொடர்பான குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன. சாலை பாதுகாப்பாகவும், வாகனங்கள் செல்லும் வகையிலும் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதும் ஆணையத்தின் கவனத்துக்கு வந்தது.
இதனிடையே, சாலை பராமரிப்பு ஏன் தாமதமானது என்பதற்கு நெடுஞ்சாலைத்துறை தரப்பில் ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த ஒப்பந்ததாரருடன் வழக்கு நிலுவையில் இருந்ததால், பராமரிப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த காரணத்தை நுகர்வோர் ஆணையம் ஏற்கவில்லை.
சுங்கக் கட்டணம் வசூல்
காரணம், இங்கு இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. 2021 மார்ச் முதல் 2025 ஏப்ரல் வரை, அதாவது சுமார் 4 வருடங்களில் இந்த சுங்கச்சாவடியில் ரூ.919.91 கோடி வசூல் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவு பெரிய தொகை சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட நிலையில், அந்த சாலையை முறையாகவும் பாதுகாப்பாகவும் பராமரிக்கவில்லையானால், சுங்கக் கட்டணம் செலுத்தி செல்லும் வாகன ஓட்டிகளின் நிலை என்ன? இதைத்தான் நுகர்வோர் ஆணையம் முக்கியமாக பார்த்திருக்கிறது.
அதனால், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும், அதன் பராமரிப்பு ஒப்பந்த நிறுவனமான சிவா பில்டெக்கும் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ சுரேஷ்பாபுவுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வழக்கு செலவாக ரூ.15 ஆயிரமும் வழங்க வேண்டும்.
1 கோடி அபராதம்
ஆனால், அதைவிட முக்கியமான உத்தரவும் வந்துள்ளது. சாலை பராமரிப்பில் ஏற்பட்ட குறைபாடுகளுக்காக சிவா பில்டெக் நிறுவனத்துக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை தமிழ்நாடு மாநில நுகர்வோர் ஆணையத்தின் சட்ட உதவி நிதிக்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட அனைத்து சாலை குறைபாடுகளையும் 2 மாதங்களுக்குள் சரிசெய்ய வேண்டும் என்று ஆணையம் காலக்கெடு விதித்துள்ளது.
எச்சரிக்கை பலகைகள், வழிகாட்டும் குறியீடுகள்
விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களில் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் பலகைகள் வைக்க வேண்டும். வாகனங்கள் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை தெளிவாக காட்டும் வழிகாட்டும் குறியீடுகளையும் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பது ஒரு பக்கம் என்றால், அந்தக் கட்டணத்தை செலுத்தி செல்லும் மக்களுக்கு பாதுகாப்பான சாலையை வழங்குவதும் முக்கியம். கிருஷ்ணகிரி விவகாரத்தில் வந்துள்ள இந்த உத்தரவு, இதைத்தான் தெளிவாக உணர்த்துகிறது.
இனிமேல் 2 மாதங்களுக்குள் சாலைகள் சரிசெய்யப்படுகிறதா, எச்சரிக்கை பலகைகள் மற்றும் வழிகாட்டும் குறியீடுகள் அமைக்கப்படுகிறதா என்பதுதான் கிருஷ்ணகிரி வழியாக தினமும் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications
