‘முதலமைச்சர் என்ன கிள்ளு கீரையா விஜய்.. அஜித்தை பார்த்து கத்துக்கோங்க..’ வேல்முருகன் அட்வைஸ்
கிருஷ்ணகிரி: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுகவும், அவர்களிடம் ஆட்சியை தட்டி பறிக்க அதிமுக - பாஜக கூட்டணியும் முயற்சி செய்து வருகிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தவெக தலைவர் விஜய் திமுக எதிர்ப்பில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள வேல்முருகன், முதலமைச்சரை அங்கிள் என்றழைப்பது விஜய்க்கு நல்லதல்ல. என்று நடிகர் அஜித்துடன் ஒப்பிட்டு அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஒசூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இளைஞர்களிடம் ஆதரவு பெற்ற நடிகர் விஜய் திருப்பரங்குன்றம் கோயில் பிரச்சனையை பற்றி வாய் திறக்கவில்லை. அந்த சம்பவம் குறித்து ஆதரவோ, கண்டனமோ விஜய் தெரிவிக்கவில்லை. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்று எப்படி சொல்கிறார் என்று தெரியவில்லை.

விஜய் இரட்டை வேடம்
முக்கியமாக நாட்டின் முதலமைச்சரை பார்த்து சார் என்று நையாண்டி பேசுவது, அங்கிள் என்று நக்கலாக விமர்சிப்பது எல்லாம் நல்லதல்ல. இது விஜய்க்கு அழகல்ல. ஒரு நடிகர். 18 - 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஈர்ப்பாக இருக்கிறார் என்பதற்காக, யாரை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம். எந்த மேடையிலும் முதலமைச்சர் குறித்தோ, அமைச்சர்கள் குறித்தோ பேசும் விஜய் மதவாத சக்திக்கு எதிராக ஏன் பேச மறுக்கிறார்.
மதவாத கும்பல்கள் கிறிஸ்துவ ஆலயங்கள் மீது நடத்திய தாக்குதலை ஏன் விஜய் கண்டிக்கவில்லை. பர்தா அணிந்த அப்பாவி இஸ்லாமியர்களை கேலி கிண்டிலத்த இந்து மத வெறியர்களை கண்டிக்க ஏன் முன் வரவில்லை. விஜய்யின் இரட்டை வேடம் இதில் வெளிப்படுகிறது. இதில் நான் தமிழ்நாட்டு மக்களைத்தான் குறை சொல்வேன்.
அஜித்தை பார்த்து கத்துக்கோங்க
எந்த அரசியல் புரிதலும், விழிப்புணர்வும் இல்லாத நடிகர் பின்னால் ஆயிரக்கணக்கானோர் அணி திரள்வது வேதனையளிக்கிறது. அறிவு பெற்ற சமூகமாக இருந்த தமிழ் சமூகம், சினிமா நடிகர் பின்னால் ஓடி அறிவற்ற சமூகமாக மாறி வருகிறது. திரைத்துறையில் உள்ள ஜேம்ஸ் வசந்தன், நடிகர் அரவிந்த்சாமி ஆகியோரே திரையில் உங்களுக்கான தலைவர்களை தேடாதீர்கள் என்று சொல்கிறார்கள்.
அப்படி பல நடிகர்கள் சொன்ன கருத்துகளையெல்லாம் பாருங்கள். ஏன் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே வைத்திருக்கும் நடிகர் அஜித் தன் ரசிகர்கள் கார் பின்னால் வாருங்கள், டிரான்ஸ்பார்மர் மீது ஏறுங்கள், பொது மக்கள் வழித்தடத்தை மறியுங்கள் என்று சொல்லவில்லை. திரைத்துறை ஊடாக கிடைத்த புகழ் வெளிச்சத்தை, ஆக்க சக்திக்காகதான் பயன்படுத்த வேண்டும்.
முதலமைச்சர் கிள்ளு கீரையா
நடிகர் விஜய் இளைஞர் தலைமறையின் எதிர்காலத்தை அழிப்பதற்காக பயன்படுத்துகிறார்கள். சினிமா நடிகர் என்பதால் தன்னை பார்க்க திரளும் மக்கள் முன்பு முதலமைச்சரையும், அமைச்சர்களையும், பிற அரசியல் கட்சி தலைவர்களையும் கிள்ளு கீரையாக பேசுவதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்." என்றார். அவரின் இந்த கருத்துக்கு சமூகவலைதளங்களில் விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications