எப்ஸ்டீன் பைல்ஸ் பஞ்சாயத்து.. கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பிரிட்டன் முன்னாள் இளவரசர்!
லண்டன்: பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனின் பைல்களில் பல முக்கிய நபர்களின் பெயர்கள் அடிப்பட்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் சிக்கியிருந்தார். இதனையடுத்து அவர் இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் இளைய சகோதரரும், முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், அரசுப் பதவி துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டார். பிரிட்டன் வரலாற்றில் ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்குப் பிறகு, அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

ஆண்ட்ரூ தனது 66வது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருந்தபோது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும், அன்றைய தினமே அவர் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் அவருக்கு எதிரான விசாரணைகள் தொடரும் என இங்கிலாந்து காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. மன்னர் மூன்றாம் சார்லஸ் இந்த சம்பவத்தை ஆழ்ந்த கவலையுடன் நோக்குவதாகவும், சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆண்ட்ரூ அரசுப் பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கைது செய்யப்பட்டதாக பிரிட்டன் காவல்துறை தெரிவித்திருக்கிறது. ஆண்ட்ரூ 10 ஆண்டுகளாக பிரிட்டனின் வர்த்தகத் தூதராகப் பணியாற்றியுள்ளார். இந்த காலத்தில் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டைனுடன் நாட்டின் மிக முக்கிய ரகசிய தகவல்களை பகிர்ந்துக்கொண்டதாக ஆண்ட்ரூ மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
ஜெஃப்ரி எப்ஸ்டைன் என்பவர் பைனான்சியராக இருந்தவர். ஆனால், அவர் சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலுக்கு உட்படுத்தினார். உலகின் மிக முக்கிய நபர்களுக்கு கடத்தப்பட்ட சிறுமிகளை பாலியல் அடிமைகளாக அனுப்பி வைத்தார். தற்போது ஜெஃப்ரி எப்ஸ்டைனின் பைல்கள் பொது வெளியில் அமெரிக்க நீதிமன்றத்தால் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிட்டிருக்கும் பெயர்கள், உலக பணக்காரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த பைல்களில்தான் ஆண்ட்ரூவின் பெயர் அடிப்பட்டிருக்கிறது. ஆனால், தனக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஆண்ட்ரூ மறுத்துள்ளார். ஜெஃப்ரி எப்ஸ்டைனுடன் தனக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று கூறியிருக்கிறார். இருப்பினும் ரகசிய தகவல்களை ஷேர் செய்தது குறித்து எந்த மறுப்பையும் அவர் தெரிவிக்கவில்லை.
இங்கிலாந்தை பொறுத்தவரை, அரசுப் பதவியை துஷ்பிரயோகம் செய்வது என்பது, தீவிரமான குற்றமாகும். இதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications