லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல்! துணைத் தலைவராக வெற்றி பெற்ற திமுக பிரமுகர் மகள்!
லண்டன் ஆக்ஸ்போர்டு புருக்ஸ் பல்கலைக்கழக மாணவர் சங்க துணை தலைவர் தேர்தலில் தமிழக மாணவி வெற்றி.
சென்னை: லண்டன் ஆக்ஸ்போர்டு புருக்ஸ் பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு பிரமுகர் ஜே.எம்.பஷீரின் மகள் பாஷினி பாத்திமா துணைத் தலைவராக வெற்றி பெற்றிருக்கிறார்.
துணைத் தலைவர் பதவிக்கு மொத்தம் 5 பேர் போட்டியிட்ட நிலையில், 1,364 வாக்குகள் பெற்று இந்தியாவை சேர்ந்த பாஷினி பாத்திமா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் தனது இளநிலை கல்லூரி படிப்பை சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பயின்றது குறிப்பிடத்தக்கது.

லண்டன் ஆக்ஸ்போர்டு
லண்டன் ஆக்ஸ்போர்டு புருக்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் பதவிக்கு சிறுபான்மை நல உரிமை பிரிவு பிரமுகரும், தேசியத் தலைவர் திரைப்படத்தின் ஹீரோவுமான ஜே.எம்.பஷீரின் மகள் பாஷினி பாத்திமா போட்டியிட்டார். மூன்றாயிரத்து 977 பேர் வாக்களித்த நிலையில் 1,364 வாக்குகள் பெற்று தேர்தலில் பாஷினி பாத்திமா வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட 5 பேரும் 500 முதல் 600 வரை மட்டுமே வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

என்னென்ன வாக்குறுதி
பல்கலைக்கழக வளாகத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு, மாணவர்கள் முன்னேற்றத்துக்கான விழிப்புணர்வு உள்ளிட்ட 3 வாக்குறுதிகளை கொடுத்து பாஷினி பாத்திமா தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். தற்போது IBM படித்து வரும் இவர் பள்ளி படிப்பை சென்னை ஆழ்வார் திருநகர் சென்ட் ஜான்ஸ் பள்ளியிலும், இளநிலை கல்லூரி படிப்பை சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலும் பயின்றது குறிப்பிடத்தக்கது.

பிற நாடுகள்
இந்த தேர்தலில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் இந்திய மாணவர்கள் மட்டுமின்றி பிற நாடுகளை சேர்ந்த மாணவர்களும் அதிகளவில் இவரை ஆதரித்து வாக்களித்திருப்பது தான். அன்பு, பண்பு ,வீரம் மூன்றும் கலந்த தமிழ்நாட்டு பெண் என்பதில் பெருமிதம் கொள்வதாக கூறியுள்ள பாஷினி பாத்திமா, தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்ற உறுதியை அளித்திருக்கிறார்.

தந்தை கொண்டாட்டம்
இதனிடையே மகளின் வெற்றியை சென்னையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு பிரமுகர் ஜே.எம்.பஷீர், அமைச்சர் செஞ்சி மஸ்தானை சந்தித்து வாழ்த்து பெற்றதோடு இனிப்பும் கொடுத்து மகிழ்ந்தார்.












Click it and Unblock the Notifications