இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு.. பிபிசிக்கு எதிராக அதன் ஊழியர்கள் கொந்தளிப்பு!
லண்டன்: பிபிசி செய்தி ஊடகம், இஸ்ரேல்-காசா போரில் நடுநிலையுடன் இல்லாமல், அல்லது பாதிக்கப்பட்டவருடன் இல்லாமல் கண்மூடித்தனமாக இஸ்ரேல் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது என அதன் சொந்த ஊழியர்களே குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து 100க்கும் அதிகமான பிபிசி ஊழியர்கள், நிறுவனத்தின் சிஇஒ-க்கு கடிதம் எழுதியுள்ளனர்.
பாலஸ்தீன விவகாரம் இரண்டாம் உலகப்போர் முடிந்த காலத்திலிருந்து விவாதமாக பேசப்பட்டு வருகிறது. மத்திய கிழக்கில் இஸ்லாமியர்கள் அதிகம். இங்கு தங்களுக்கு என ஒரு அதிகாரத்தை நிலை நாட்ட பிரிட்டனும், அமெரிக்காவும் நீண்ட காலமாக யோசித்து வந்தன. அப்போதுதான் யூதர்கள் தங்களுக்கு என ஒரு நாடு வேண்டும் என்று கோரியிருந்தனர். அவர்களின் மத நூலில் குறிப்பிட்டுள்ளபடி, பாலஸ்தீனத்தில்தான் அவர்கள் கடவுள் உருவாக்கிய நாடு இருப்பதாக நம்பினர். எனவே பாலஸ்தீனத்தில் இஸ்ரேலை உருவாக்க அமெரிக்காவும், பிரிட்டனும் முன் வந்தது.

இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இரு நாடுகளும் செய்ய, இயல்பிலேயே இஸ்ரேல் இந்த நாடுகளுக்கு மிகவும் விசுவாசம் மிக்கதாக மாறியது. காலப்போக்கில் பாலஸ்தீனம், இஸ்ரேலால் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது மேற்கு கரை, காசா என்கிற இரண்டு துண்டு நிலங்களாக சுருங்கிவிட்டது. இதற்கு எதிராக அரசியல் களத்தில் போராடியவர்களை அமெரிக்க உதவியுடன் இஸ்ரேல் ஒடுக்கியது. எனவே வேறு வழியின்றி இம்மக்கள், பாலஸ்தீன விடுதலை இயக்கங்களை உருவாக்கினர். இதில் ஹமாஸ் எனும் குழு ஆயுதம் ஏந்திய இயக்கமாக உருவெடுத்தது.
இந்த குழு கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்தது. இதில் சில நூறு பேர் கொல்லப்பட்டனர். பலர் பணையக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இந்த தீவிரவாத செயலுக்கு நிச்சயம் பழி தீர்ப்போம், ஹமாஸை ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் அறிவித்தது. அன்று முதல் இன்று வரை சுமார் 40,259 பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கின்றனர். 101,827 படுகாயமடைந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் தலைவர்கள் அனைவரையும் கொன்று தீர்த்தது. ஆனால் இன்னும் போரை நிறுத்தவில்லை.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஹமாஸ் வீரர்களை கொல்வதாக கூறி ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொன்றுவிட்டீர்கள், ஆனாலும் இன்னமும் போர் நிறுத்தப்படவில்லை என்று எதிர்ப்பு எழுந்தது. இவ்வளவு ஏன் அமெரிக்கா கூட இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஆனாலும் இஸ்ரேல் போரை இன்னமும் நடத்தி வருகிறது.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க மறுபுறம், பிபிசி செய்தி ஊடகத்தின் ஊழியர்கள், பிபிசி ஊடகம் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக விமர்சித்துள்ளனர்.
இது குறித்து அந்நிறுவனத்தின் சிஇஓ-க்கு அதன் ஊழியர்கள் 100க்கும் அதிகமானவர்களும், வேறு சில பத்திரிகையாளர்களும், நடிகர்களும் கடிதம் எழுதியுள்ளனர். அதில் இஸ்ரேல் தரப்பு நியாயத்தை நிரூபணம் செய்ய எந்த ஆதாரமும் இல்லை. எனவே எதன் அடிப்படையில் அந்நாட்டின் நடவடிக்கைக்கு சப்போர்ட் செய்யப்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இஸ்ரேலுக்கு கண்மூடித்தனமாக ஆதரவளிப்பதன் மூலம், பாலஸ்தீனர்களை மனிதாபிமானமற்றவர்களாக மாற்றிவிடுகிறோம் என்றும் கூறியுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய ஊடக நிறுவனமான பிபிசியின் நடவடிக்கைக்கு, அதன் சொந்த ஊழியர்களே எதிர்ப்பு தெரிவித்திருப்பது விவாதமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications