லண்டன் முருகன் கோயிலில் அண்ணாமலை.. சாமி தரிசனம் செய்த கையோடு.. என்ன பிளான் தெரியுமா?
லண்டன்: இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனுக்கு சென்றுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , அங்குள்ள முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
வெளிநாடுகளில் வாழும், பணியாற்றி வரும் இந்தியர்களுக்கும் மத்திய அரசின் சாதனைகளை கொண்டு செல்வதற்காகவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்கள் குறித்தும் திமுகவினர் குறித்து ஊழல் குற்றச்சாட்டுகளை அடிக்கடி கூறி வருகிறார். அதேபோல் கூட்டணியில் உள்ள அதிமுக குறித்து அவ்வப்போது ஊழல் குறித்து பேசி அதிரவைத்து வருகிறார்.
பாஜகவை தமிழகத்தில் வளர்க்க விரும்பும் அவர், அதற்காக இதுவரை தமிழகத்தில் பாஜக செய்து வந்த அரசியலை மாற்றி வேறு பாணியில் செய்து வருகிறார். திமுக மற்றும் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். செந்தில் பாலாஜிக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் அண்ணாமலை தான் ஒரு வகையில் காரணம் என்று கூறப்படுகிறது. அண்ணாமலை மீது உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் மிகவும் நம்பிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி பல்வேறு பணிகளை அண்ணாமலை செய்தும் வருகிறாராம்.
மத்தியில் ஆட்சி பொறுப்பில் கடந்த 9 ஆண்டுகளாக பாஜக இருக்கிறது.. பாஜக அடுத்த ஆண்டு 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற விரும்புகிறது. அதற்கான திட்டமிடல்களை பாஜக செய்து வருகிறது. கூட்டணிகளை ஒருங்கிணைப்பது, பாஜக அசின்வின் சாதனைகளை எடுத்துரைப்பது போன்ற பணிகளை செய்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில் பா.ஜ.க. சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
தமிழக பா.ஜ.க சார்பிலும் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வருகிறார்கள். அந்த வகையில் வெளிநாடுகளில் வாழும், பணியாற்றி வரும் இந்தியர்களுக்கும் மத்திய அரசின் சாதனைகளை கொண்டு செல்வதற்கு பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
அந்தவகையில், தமிழக பா.ஜ.க. தலைவராக இருக்கும் கே.அண்ணாமலை 5 நாட்கள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு, அண்ணாமலை சென்னையில் இருந்து நேற்று சென்றார். லண்டன் சென்றடைந்த அண்ணாமலை அங்குள்ள முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அண்ணாமலைக்கு அங்கு பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். மேலும், அனைவரின் நலனுக்காக முருகனிடம் வேண்டிக் கொண்டதாகவும் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். லண்டனில் உள்ள தமிழர்களை சந்தித்து மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல, பிர்மிங்காமில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அண்ணாமலை பங்கேற்க உள்ளார். இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற வார்விக் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் அண்ணாமலை கலந்துரையாடுவார் என்றும் அரசியல் உள்பட பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அண்ணாமலை பதில் அளிக்க போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications