மன்னர் சார்லஸ் திடீரென உயிரிழப்பு? சர்வதேச ஊடகங்கள் சொல்லிடுச்சாம்.. உண்மையில் என்ன நடந்தது!
லண்டன்: பிரிட்டன் மன்னர் சார்லஸ் உயிரிழந்ததாக ரஷ்ய நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்ட நிலையில், இதனால் இணையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சூழலில் இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
பிரிட்டன் நாட்டை பொறுத்தவரை அங்கே மன்னர் குடும்பத்திற்குச் செல்வாக்கு அதிகம். இப்போது அங்கே மக்களாட்சி தான் நடக்கிறது என்ற போதிலும், மன்னர் குடும்பத்திற்கு அதிகபட்ச மரியாதை அளிக்கப்படும்.

அங்கே பல ஆண்டுகளாக மகாராணியாக இருந்தவர் ராணி எலிசபெத்.. அவர் வயது மூப்பு காரணமாகக் கடந்த 2022ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதன் பிறகு அவரது மகன் சார்லஸ் மன்னராகப் பதவியேற்றுக் கொண்டார்.
மன்னர் சார்லஸ் மரணம்: இதற்கிடையே ரஷ்யாவில் உள்ள சில ஊடகங்கள் பிரிட்டன் மன்னர் சார்லஸ் உயிரிழந்துவிட்டதாகச் செய்திகளை வெளியிட்டன. அவர் கேன்சர் பாதிப்பு காரணமாகச் சிகிச்சை பெற்று வரும் நிலையில், திடீரென வெளியான இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பிரிட்டன் மக்கள் கவலையடைந்தனர். இதற்கிடையே உக்ரைனில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் மற்றும் பக்கிங்ஹாம் அரண்மனை இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
மன்னர் சார்லஸ் உயிரிழந்துவிட்டதாக வெளியான தகவல் முழுக்க முழுக்க பொய் என்றும் அவர் உயிருடன் இருக்கிறார் என்றும் விளக்கமளித்துள்ளன.
பரவிய தகவல்: ரஷ்யாவின் மிகவும் மரியாதைக்குரிய செய்தித்தாள்களில் ஒன்றான வேடோமோஸ்டி அதன் டெலிகிராம் சேனலில் இது குறித்த தகவலைப் பகிர்ந்தது. "பிரிட்டிஷ் மன்னர் மூன்றாம் சார்லஸ் இறந்துவிட்டார்" என்ற தலைப்புடன் ராணுவ சீருடையில் அவருக்கு இறுதிச் சடங்கு செய்வது போன்ற படத்தையும் அவர்கள் தங்கள் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருந்தனர். அது கொஞ்ச நேரத்தில் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்பட்டாலும் அதற்குள் அது டிரெண்டிங் ஆனது.
ரஷ்யாவின் பல அதிகாரப்பூர்வ தளங்கள் கிங் சார்லஸ் போட்டோவை பகிர்ந்து அவர் உயிரிழந்துவிட்டதாகவும் இது குறித்த தகவலை மன்னர் குடும்பம் தங்களுக்குத் தெரிவித்ததாகவும் கூறியிருந்தனர். மேலும், கிங் சார்லஸ் மார்ச் 17ஆம் தேதி எதிர்பாராத விதமாகக் காலமானார் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.ரஷ்ய ஊடகங்களில் இதுபோல போலியான செய்திகள் பரவியதைத் தொடர்ந்து, உக்ரைனில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.
போலியானது: அதில் மன்னர் சார்லஸ் உயிருடன் இருப்பதாகக் கூறப்பட்டு இருந்தது. "கிங் சார்லஸ் III மரணம் பற்றிய செய்திகள் போலியானது" என்று விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. அதேபோல பக்கிங்ஹாம் அரண்மனையும் இந்த செய்தியை நிராகரித்தது. அதன் பின்னரே ரஷ்ய அரசின் அதிகாரப்பூர்வ டாஸ் செய்தி நிறுவனம் கிங் சார்லஸ் உயிருடன் இருப்பதாகக் கூறியது. அதன் பின்னரே பல ரஷ்ய ஊடகங்கள் தங்கள் முந்தைய செய்திகளைத் திரும்பப் பெற்றன.
75 வயதான பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது மரணம் குறித்த வதந்தி தீயாகப் பரவி இருக்கிறது.இந்தச் சூழலில் தான் கிங் சார்லஸ் III மரணம் உண்மை இல்லை.. அது போலியான தகவல் என்று அதிகாரப்பூர்வ விளக்கம் வந்துள்ளது. திடீரென இதுபோன்ற தகவல் பரவ என்ன காரணம் என்று தெளிவாகத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications