பிரதமர் பதவிக்கு ஆபத்து.. ரிஷி சுனக்கை மொத்தமாக காலி செய்யும் "அந்த" ஒரு மசோதா.! கடும் எதிர்ப்பு
லண்டன்: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு எதிராக இப்போது அவரது சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர் கொண்டு வந்த புது குடியேற்ற விதிகள் அவரது பிரதமர் பதவிக்கே ஆப்பு வைப்பதாக மாறியுள்ளது.
பிரிட்டன் பிரதமராக இருப்பவர் ரிஷி சுனக்.. அவர் பிரதமராகப் பதவியேற்ற கொஞ்ச நாட்களிலேயே அவர் பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறார். சொந்த கட்சியிலேயே அவருக்கு முழுமையாக ஆதரவு இல்லை.

அவர் எடுக்கும் முடிவுகளும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இதற்கிடையே இப்படி ஏற்கனவே பல சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் ரிஷி சுனக்கிற்கு இப்போது மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ரிஷி சுனக்: சமீபத்தில் தான் ரிஷி சுனக் குடியேற்றத்தைத் கட்டுப்படுத்தும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தார். பிரிட்டனில் சட்ட விரோத குடியேற்றம் மிகப் பெரிய பிரச்சினையாக மாறி இருக்கும் நிலையில், ரிஷி சுனக் திட்டம் அதைத் தீர்க்கும் என்று நினைத்தார்கள். ஆனால், அதற்கு நேர்மாறாக இதில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் அந்நாட்டின் குடிவரவு துறை அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.
போர் அதிகம் நடக்கும் நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. இவர்கள் ஆபத்தான வகையில் பிரிட்டனுக்கு வருகிறார்கள். அகதிகள் குடியேற்றம் என்பது பிரிட்டனில் பெரிய பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இதைச் சமாளிக்க ரிஷி சுனக் "Stop The Boats" என்ற திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தின்படி புகலிடம் கோரி வருவோர் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவிற்கு அனுப்பப்படுவார்கள்.
பெரும் விவாதம்: இருப்பினும், இது அவரது சொந்தக் கட்சியிலேயே பெரும் விவாதமாக மாறியுள்ளது.. ஒரு தரப்பினர் இதை ஒப்புக்கொண்டாலும் மற்றொரு தரப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுவே இப்போது ரிஷி சுனக்கிற்கு தலைவலியாக மாறியுள்ளது.
அகதிகளாக வருவோரை ருவாண்டாவிற்கு அனுப்பும் பிரிட்டன் அரசின் திட்டம் சட்டவிரோதமானது என்று கூறி கடந்த ஜூன் மாதம் இந்தத் திட்டத்தை அந்நாட்டு கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ருவாண்டாவை பாதுகாப்பான நாடு எனச் சொல்ல முடியாது என்பது அவர்கள் வாதம். இதை எதிர்த்து இங்கிலாந்து அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், அவர்களும் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர்.
ருவாண்டா: இருப்பினும், ரிஷி சுனக் தனது திட்டத்தில் பின்வாங்க ரெடியாக இல்லை. இதனால் அவர் ருவாண்டா பாதுகாப்பான நாடு என்பதை உறுதி செய்யும் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இந்த மசோதா டிசம்பர் 12ஆம் தேதி வாக்கெடுப்புக்கு விடப்படும். ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கு வந்து ஓராண்டு ஆகும் நிலையில், இது அவரின் தலைமைக்குச் சிக்கலைக் கொண்டு வந்துள்ளது.
ஏற்கனவே அவரது கன்சர்வேடிவ் கட்சியின் எம்பி ஆண்ட்ரியா ஜென்கின்ஸ் ரிஷி சுனக்கிற்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்குப் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார், மேலும், சிலரும் ரிஷி சுனக்கிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
பெரிய சிக்கல்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்ஸிட் ஒப்பந்தம் நிறைவேறிய பிறகு அப்போது பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் ராஜினாமா செய்தார். அதன் பிறகு தெரசா மே, போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸ் என்று மூன்று பேர் பிரதமர் பதவிக்கு வந்த போதிலும் அவர்களால் முழுமையாகப் பிரதமர் பதவியில் இருக்க முடியவில்லை.
அகதிகளை வருவோரைக் கட்டுப்படுத்திவிட்டு, பிரிட்டன் மக்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தும் வகையில் புது சட்டத்தை முன்மொழிந்துள்ளனர். இந்த புதிய குடியேற்றச் சட்டத்தின் கீழ் பராமரிப்புப் பணியாளர்களாக உள்ள வெளிநாட்டினர் தங்கள் உறுப்பினர்களைப் பிரிட்டனுக்கு அழைத்து வரத் தடை விதிக்கப்படும். இருப்பினும், இதற்குப் பொருளாதாரத்தில் நெகடிவ் பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்று கூறி சொந்தக் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்












Click it and Unblock the Notifications