போப் ஆண்டவர் இறுதி ஊர்வலம் தொடங்கியது.. உலக தலைவர்கள் உள்பட லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்பு
லண்டன்: போப் ஆண்டவர் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் போப் ஆண்டவர் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த பிப்ரவரி மாதம், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சுவாசக் குழாயில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 5 வாரங்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்தார்.

இதையடுத்து அவரது உடல் நலம் தேறியதையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில்,தான் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி காலை 7.35 மணிக்கு போப் பிரான்சிஸ் காலமானதாக வாட்டிகன் தெரிவித்தது. கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ் மறைவு உலகம் முழுவதும் உள்ள பல கோடிக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களை சோகம் அடைய வைத்தது.
போப் பிரான்சிஸ் மறைவையடுத்து இந்திய உள்பட பல்வேறு நாடுகளிலும் துக்கம் அனுசரிக்கப்பட்டது. போப் பிரான்சிஸ் உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் போப் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அஞ்சலி செலுத்தினார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாடிகனுக்கு வந்தனர். போப் ஆண்டவரின் இறுதி ஊர்வலம் இன்று தொடங்கியது. 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர். பின்னர் வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications