அந்த "சின்ன" தவறு! 4வது நாளில் "பேக் சீட்டில்" இந்திய அணி! இங்கிலாந்து டெஸ்டில் சறுக்கியது இங்குதான்
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா ஆடும் 5வது டெஸ்ட் போட்டி மிகவும் இக்கட்டான நிலையை அடைந்துள்ளது. இன்று மட்டும் 7 விக்கெட் எடுக்க வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.
முதல் 3 நாட்கள் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்த இந்திய அணி.. 4வது நாளின் இரண்டாம் பாதியில் ஆட்டத்தை நழுவவிட்டது. இப்போது ஆட்டத்தில் இங்கிலாந்தின் கையே ஓங்கி இருக்கிறது.
இன்றைய ஆட்டத்தில் இந்தியாவின் பவுலிங்கை பொறுத்தே இந்த தொடரை இந்தியா வெல்லுமா.. அல்லது தொடர் சமன் அடையுமா என்பது தெரிய வரும்.

5வது டெஸ்ட்
இங்கிலாந்து இந்தியா இடையிலான 5வது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்த 4 போட்டிகளில் இந்தியா 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.அதன்பின் கொரோனா காரணமாக 5வது டெஸ்ட் போட்டி தள்ளி வைக்கப்பட்டது. தற்போது கொரோனாவிற்கு பின்பாக இந்த டெஸ்ட் போட்டி நடந்து கொண்டு இருக்கிறது.

இந்தியா முதல் இன்னிங்ஸ்
டாஸ் தோல்வி அடைந்து இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. 5வது டெஸ்ட் போட்டி எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பும்ரா கேப்டனாக வகிக்கும் இந்த போட்டியில் பண்ட், ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். 111 பந்துகளில் 131.53 ஸ்டிரைக் ரேட்டில் 146 ரன்களை பண்ட் எடுத்தார். அதேபோல் ஜடேஜா 104 ரன்கள் எடுத்தார். கடைசியில் வந்த பும்ரா வெறும் 16 பந்தில் 2 சிக்ஸ், 4 பவுண்டரி என்று 31 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் முதல் இன்னிங்சில் இந்தியா மொத்தமாக 416 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்
இதையடுத்து இறங்கிய இங்கிலாந்து தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாவது நாளிலேயே 5 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்தது. இதனால் மொத்தமாக 10 விக்கெட் இழப்பிற்கு வெறும் 284 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து எடுத்தது. பிரைஸ்டோ மட்டும் 106 ரன்கள் எடுத்தார். சிராஜ் 4 விக்கெட், பும்ரா 3 விக்கெட் எடுத்தனர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸ்
இதன் பின் இறங்கிய இந்திய அணி 200+ ரன்கள் எடுத்தாலே நல்ல டார்கெட் வைக்க முடியும் என்பதால் பிரஷர் இல்லாமல் ஆடியது. புஜேரா 66, பண்ட் 57 ரன்கள் எடுத்தனர். இதனால் இந்திய அணி 245-10 ரன்கள் எடுத்தது. அதோடு இங்கிலாந்து அணிக்கு 378 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது. இதுவரை இந்தியாவின் கையே ஓங்கி இருந்தது. ஆனால் அதன்பின் இங்கிலாந்து பேட்டிங் இறங்கியதும்தான் ஆட்டத்தின் போக்கு மாறியது.

100 ரன்கள்
முதல் 100 ரன்களுக்கு இந்திய அணியால் விக்கெட் எடுக்க முடியவில்லை. லீஸ், சாக் இருவரும் மிகவும் சிறப்பாக ஆடி தலா 56, 46 ரன்களை எடுத்தனர். இவர்களின் விக்கெட்டை எடுக்கவே இந்திய அணி பவுலர்கள் திணறினார்கள். 100 ரன்களை இங்கிலாந்து தாண்டிய பின் பும்ரா 2 விக்கெட், 1 ரன் அவுட் என்று இங்கிலாந்து 3 விக்கெட்டை இழந்தது. இருந்தாலும் பின்னர் ஜோ ரூட், பிரைஸ்டோ பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினார்கள்.

எங்கே தவறு?
இதில் இந்திய அணி லாங் ஆன், லாங் ஆப்பில் அதிக பீல்டர்களை நிறுத்தியது. இதனால் இங்கிலாந்து அணி வரிசையாக சிங்கிள்ஸ் எடுத்தது. பெரிதாக அதிக ஓவர்கள் மெயின்டெய்ன் ஆகவில்லை. இதுதான் இந்திய அணி செய்த அந்த தவறு. ஒரு ஓவருக்கு 4 ரன்களாவது சிங்கிள்ஸ் மூலம் சென்றது. இப்படி இவர்கள் ஸ்டிரைக் ரொட்டேட் செய்து கொண்டே இருந்த காரணத்தால் ரன் அதிகமாகிக்கொண்டே இருந்தது.

பெரிய ஷாட்
பெரிய ஷாட் அடிக்க போய் விக்கெட்டை இழக்காமல்.. இங்கிலாந்து எல்லா ஓவரில் குறைந்தது 4 ரன்களை சிங்கிள்ஸ் மூலம் உறுதி செய்தது. பும்ரா இதை தடுக்க வைக்கும் அளவிற்கு பீல்டிங் நிறுத்தவில்லை. இதுவே தற்போது இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது. இன்று கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி. இல்லை என்றால் இந்தியா 7 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். அதில் பிரைஸ்டோ, ஜோ ரூட், ஸ்டோக்ஸ் விக்கெட் அடக்கம் என்பதால் இந்தியாவிற்கு இன்றைய நாள் ஆட்டம் மிகவும் சவாலானதாக இருக்கும்!












Click it and Unblock the Notifications