HMPVஐ விடுங்க.. திடீரென பரவும் 4 வெவ்வேறு வைரஸ்.. இதுதான் குவாட்-டெமிக்! அமெரிக்கா, பிரிட்டன் அலறுதே
லண்டன்: கொரோனாவுக்கு பிறகு சீனாவில் இப்போது திடீரென புதிதாக HMPV தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதைக் கண்டு பொதுமக்கள் அச்சமடைய வேண்டும் எனச் சுகாதார வல்லுநர்கள் எச்சரித்து வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் திடீரென குவாட்-டெமிக் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். இது அங்குள்ள சுகாதார கட்டமைப்பிலும் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சீனாவில் சுவாசக் குழாயைப் பாதிக்கும் ஹெச்எம்பிவி என்ற வைரஸ் இப்போது திடீரென பரவி வருகிறது. இதனால் அங்குப் பலர் மருத்துவமனைகளிலும் அட்மிட் ஆக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குவாட்-டெமிக்:
கொரோனா பரவலுக்குப் பிறகு சுமார் 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதேபோன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இரு நோய்களுக்கும் அறிகுறிகள் ஒரு மாதிரி இருந்தாலும் கூட இரு சூழல்களும் முற்றிலும் வித்தியாசமானது என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், இந்த ஹியூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் அதிக ஆபத்தை ஏற்படுத்தாது என்றும் சொல்கிறார்கள்.
இந்த HMPV பாதிப்பு இப்போது இந்தியாவிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நமது நாட்டில் பெங்களூரில் இருவருக்கு உட்பட ஏழு பேருக்கு இந்த பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது குறித்து நாம் அச்சப்படத் தேவையில்லை என்றே மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க இப்போது அமெரிக்காவும் இங்கிலாந்தும் "குவாட்-டெமிக்" நோய் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. அதாவது ஒரே நேரத்தில் நான்கு வெவ்வேறு வைரஸ்கள் பரவி அங்குள்ள சுகாதார கட்டமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா:
அமெரிக்காவில் குளிர் காலம் தொடங்கியுள்ளதால் ஃப்ளூ, கோவிட், சுவாச ஒத்திசைவு வைரஸ் (RSV) மற்றும் நோரோவைரஸ் ஆகியவற்றின் பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஃபார்ச்சூன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை "குவாட்-டெமிக்" என்ற குறிப்பிடுகிறார்கள்.
இது குறித்துத் தொற்று நோய்களுக்கான தேசிய அறக்கட்டளையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ராபர்ட் ஹாப்கின்ஸ் கூறுகையில், "இப்போது 4 வகையான வைரஸ்களும் வேகமாகப் பரவுகிறது. ஒவ்வொரு பகுதிகளிலும் இந்த பாதிப்பு இருக்கிறது. மக்கள் இதற்காகப் பீதியடையத் தேவையில்லை.. ஆனால், தடுப்பூசி போடுக் கொள்ளுங்கள். குறிப்பாக 6 மாத வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா மற்றும் கோவிட் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார்.
பிரிட்டன்:
அமெரிக்கா மட்டுமின்றி பிரிட்டன் நாட்டிலும் கூட ஃப்ளூ, நோரோவைரஸ் மற்றும் சுவாச ஒத்திசைவு வைரஸ், கொரோனா அதிகரிப்பதாக ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது. சில வகை பாதிப்புகள் கடந்தாண்டை விட 3.5 மடங்கு கூட அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
இது ஃப்ளூ மற்றும் கொரோனா குறித்து பலருக்கும் தெரிந்திருக்கும். நோரோவைரஸ் என்பது குளிர்காலங்களில் அதிகம் ஏற்படும். இரைப்பை குடல் அழற்சியை ஏற்படுத்தும் இந்த நோயால் ரத்தம் தோய்ந்த வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்று வலி ஆகியவை ஏற்படுத்தும். ஆர்எஸ்வி தொற்று என்பது பொதுவாகக் குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு வகை மார்பு தொற்றாகும். இந்து இரு பாதிப்புகளுமே அங்கு அங்கு 64% வரை அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
வல்லுநர்கள்:
இது தொடர்பாக வல்லுநர்கள் மேலும் கூறுகையில், "குவாட்-டெமிக் என்பது அதிகாரப்பூர்வமான அறிவியல் பெயர் இல்லை.. ஒரே நேரத்தில் 4 வைரஸ்கள் இப்படிப் பரவுவதால் குவாட்-டெமிக் என்கிறார்கள். மேலும், ஒரே நேரத்தில் 4 வைரஸ் பரவுவதால் திடீரென நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் சுகாதார கட்டமைப்பில் அழுத்தம் ஏற்படுவதே பிரச்சினை" என்றார்.
தற்போதைய சூழலில் இரு நாடுகளிலும் இந்த 4 வைரஸ் பாதிப்புகளும் அதிகரித்து இருக்கிறது என்ற போதிலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications