ஓவர்நைட்டில் திரண்ட ஒரு லட்சம் பேர்.. லண்டனை திணறடித்த சர்ச்சை நாயகன் டாமி ராபின்சன்.. யார் இவர்?
லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் குடியேற்றத்திற்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் நடந்தது.. இதில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். பிரிட்டனில் சமீப காலங்களில் இவ்வளவு பெரிய போராட்டம் நடப்பது இதுவே முதல்முறையாகும். இந்த போராட்டத்தை டாமி ராபின்சன் என்பவரே ஒருங்கிணைத்துள்ளார். யார் இந்த டாமி ராபின்சன்! இவரது பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
பல வருடங்களாக நீதிமன்றங்கள், சிறைகள் என மாறி மாறி இருந்த டாமி ராபின்சன் தான் இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்துள்ளார். யுனைட் தி கிங்டம் என்று நடந்த இந்த மாபெரும் போராட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். சமீபத்திய ஆண்டுகளில் பிரிட்டனில் நடந்த மிகப் பெரிய போராட்டமாக இது பார்க்கப்படுகிறது. அங்கு வலதுசாரிகளுக்கு எந்தளவுக்கு ஆதரவு இருக்கிறது என்பதையே காட்டுவதாக இது இருக்கிறது.

டாமி ராபின்சன்
ஆர்ப்பாட்டக்காரர்கள் யூனியன் ஜாக் கொடிகள், செயிண்ட் ஜார்ஜ் கொடிகள் மற்றும் மரக் சிலுவைகளை ஏந்தி வந்தனர். ராபின்சனுக்கு ஆதரவாக முழக்கங்களையும் எழுப்பினர். அதேநேரம் தொழிலாளர் கட்சித் தலைவரும் பிரிட்டன் பிரதமருமான கீர் ஸ்டார்மருக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.
பேச்சு சுதந்திரத்திற்கு ஆதரவாகவே இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக ராபின்சன் ஆதரவாளர்கள் சொல்லிக் கொண்டனர். இருப்பினும், குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த போராட்டம் நடந்தது. அப்போது ஸ்டாண்ட் அப் டூ ரேசிசம் என்ற அமைப்பும் பதில் போராட்டம் நடத்திய நிலையில், அங்கு இரு தரப்பிற்கும் இடையே மோதலும் வெடித்தது. இவ்வளவு பெரிய போராட்டத்தை ஒருங்கிணைத்த டாமி ராபின்சன் யார்? இவரது பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
கோபம் தான் ஸ்டைல்
41 வயதான ராபின்சனின் உண்மையான பெயர் ஸ்டீபன் யாக்ஸ்லி-லெனான் ஆகும். பொது இடங்களில் ஆவேசமாகவும் கோபமாகவும் பேசுவதே இவரது ஸ்டைல். பிரிட்டனில் முஸ்லீம் மற்றும் வெளிநாட்டினர் குடியேற்றம் குறித்து வெளிப்படையாகவே எதிர்த்துப் பேசுபவர் ராபின்சன். சமூக வலைத்தளங்கள், போலீசார் என அனைத்து தரப்பினரையும் தாக்கி பேசுவார். மேலும், இவர் பல சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். அரசியல் நன்கொடைகளை மது மற்றும் விருந்துகளுக்காக வீணடித்ததை கூட அவரே ஒப்புக்கொண்டார். பல சர்ச்சைகளைச் சந்தித்தாலும் ராபின்சன் பிரிட்டனின் அரசியல் களத்தில் ஒரு முக்கிய நபராகவே தொடர்கிறார்.
பின்னணி
இவர் 2009இல் இங்கிலீஷ் டிஃபென்ஸ் லீக் என்ற அமைப்பை நிறுவினார். தொடர்ச்சியாக வன்முறை போராட்டங்களில் இந்த அமைப்பு ஈடுபட்டு வந்தது. தனது இயக்கத்திலேயே இவரால் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதனால் 2013இல் இந்த அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார். மேலும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கிறது. தாக்குதல், மோசடி மற்றும் பல நீதிமன்ற அவமதிப்பு குற்றங்கள் ராபின்சன் மீது இருக்கிறது.
2018இல், நீதிமன்ற விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்ததற்காக இவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிரிய அகதிகள் குறித்தும் தொடர்ச்சியாகத் தவறான தகவல்களை இவர் பரப்பி வந்தார். நீதிமன்ற தடைக்கு பிறகும் இதுபோன்ற அவதூறு கருத்துகளைப் பரப்பி வந்தார். வேண்டும் என்றே நீதிமன்ற உத்தரவுகளை மதிக்கவில்லை எனச் சொல்லி, இவருக்கு 18 மாத சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திவால் நிலை
சட்ட சிக்கல் மட்டுமில்லை பொருளாதார ரீதியாகவும் இவர் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்தார். 2021இல் தான் திவாலாகிவிட்டதாக அறிவித்த ராபின்சன், தனது ஆதரவாளர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான பவுண்டுகளை நன்கொடையாகப் பெற்றார். ஆனால், அதிலும் கூட பெரும் தொகையைச் சூதாட்டத்திலேயே இழந்தார். இப்படிப் பல சர்ச்சைகள் இருந்தாலும் அவரது செல்வாக்கை மறுக்க முடியாது. அதற்கு இந்த போராட்டத்தில் திரண்ட கூட்டமே சாட்சி.












Click it and Unblock the Notifications