உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் லிஸ்ட்.. போர் நாடுகளான இஸ்ரேல், உக்ரைனை விட மோசமான இடத்தில் இந்தியா!
லண்டன்: உலகின் மகிழ்ச்சியான நாடுகள் என்ற லிஸ்ட்டை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள நல்வாழ்வு ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்டில் வழக்கம் போல ஐரோப்பிய நாடுகளே டாப் இடத்தில் உள்ளன. அதேநேரம் இந்தியா இந்த லிஸ்டில் 118வது இடத்தை பிடித்துள்ளது. போர் நடக்கும் இஸ்ரேல், பாலஸ்தீனம், உக்ரைன் நாடுகள் கூட இந்தியாவை விட முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நல்வாழ்வு ஆராய்ச்சி மையம், கேலப் என்ற அமைப்புடன் இணைந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை வெளியிடும். அதன்படி இப்போது 2025ம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உலக நாடுகள்
இந்த லிஸ்டில் வழக்கம் போல ஐரோப்பிய நாடுகளே முன்னிலையில் இருக்கிறது. பின்லாந்து முதலிடத்தில் உள்ள நிலையில், டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் போர் சூழ்ந்துள்ள நாடுகளான இஸ்ரேல், உக்ரைன் மற்றும் பாலஸ்தீனம் போன்ற நாடுகள் கூட இந்த லிஸ்டில் இந்தியாவைக் காட்டிலும் முன்னிலையில் உள்ளன.
மக்களின் வாழ்க்கைத் தரம், தனிநபர் ஜிடிபி, ஆயுட்காலம், சமூகம், வாழ்க்கை முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் என பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்த லிஸ்டை உருவாக்கியுள்ளனர். இந்த பட்டியலில் இந்தாண்டும் வழக்கம் போலவே ஐரோப்பிய நாடுகளே ஆதிக்கம் செலுத்துகிறது. டாப் 10 நாடுகளில் பெரும்பாலான நாடுகள் ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்தவையாகவே உள்ளன. மறுபுறம் கடைசி 10 நாடுகளில் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் உள்ளன.
டாப் இடத்தில் ஐரோப்பிய நாடுகள்
இந்த லிஸ்டில் 7.73 மதிப்பெண் உடன் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து டென்மார்க் (7.52), ஐஸ்லாந்து (7.51), சுவீடன் (7.34), நெதர்லாந்து (7.30) ஆகிய நாடுகள் டாப் 5 நாடுகளாக உள்ளன. தொடர்ந்து கோஸ்டா ரிக்கா (7.27), நார்வே (7.26), இஸ்ரேல் (7.23), லக்சம்பர்க் (7.12), மெக்சிகோ (6.97) ஆகிய நாடுகள் டாப் 10 இடங்களில் வருகிறது.
தொடர்ந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், அயர்லாந்து ஆகிய நாடுகள் 10 முதல் 15 இடங்களில் உள்ளன. மேலும், மற்ற சர்வதேச நாடுகளான கனடா (18ஆவது இடம்), ஐக்கிய அமீரகம் (21ஆவது இடம்), ஜெர்மனி (22ஆவது இடம்), பிரிட்டன் (23ஆவது இடம்), அமெரிக்கா (24ஆவது இடம்) ஆகிய இடங்களில் உள்ளன.
இந்தியா எங்கே
ஒட்டுமொத்தமாக இந்த லிஸ்டில் 147 நாடுகள் உள்ளன. அதில் இந்தியா 118வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் இந்தியா 126வது இடத்தை பிடித்திருந்த நிலையில், அதில் இருந்து இந்தியா முன்னேறியே இருக்கிறது. இருப்பினும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது இஸ்ரேல் (8வது இடம்), பாலஸ்தீனம் (108வது இடம்), உக்ரைன் (111வது இடம்) ஆகிய நாடுகள் கூட லிஸ்டில் முன்னிலையில் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை சமூக சேவைகளுக்கு நன்கொடை அளிப்பதில் 57வது இடத்திலும், தன்னார்வப் பணிகளுக்கு 10வது இடத்திலும், அந்நியர்களுக்கு உதவுவதில் 74வது இடத்திலும் உள்ளன.
அண்டை நாடுகள்
இந்தியாவின் அண்டை நாடுகளைப் பொறுத்தவரைச் சீனா கடந்த ஆண்டு 60வது இடத்தில் இருந்த நிலையில், இந்தாண்டு 8 இடங்கள் சரிந்து 68வது இடத்தில் உள்ளது. அதேநேரம் பாகிஸ்தான் குறிப்பிடத்தக்கப் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்ட போதிலும் 109வது இடத்தில் உள்ளது. அதேநேரம் ஆப்கானிஸ்தான் இந்த லிஸ்டில் இப்போது கடைசி இடத்தில் இருக்கிறது. குறிப்பாக அங்குப் பெண்களின் நிலைமை மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே, மலாவி, லெபனான், சியரா லியோன் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் கடைசி 5 இடங்களில் உள்ளன.












Click it and Unblock the Notifications