82 வயது பாட்டி.. 12 இடங்களில் கடித்தே கொன்ற செல்ல நாய்.. "பிட்புல்" வளர்ப்போருக்கு வார்னிங் சம்பவம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் செல்ல நாயே உரிமையாளரைக் கடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
நாய்களை மனிதர்களின் உற்ற நண்பன் என்று பொதுவாகக் கூறுவார்கள். பல நேரங்களில் நமது நண்பர்கள் செய்ய முடியாதவற்றைக் கூட நாய்கள் அசால்டாக செய்துவிடும்.
இதனால் நாய்கள் மீது உரிமையாளர்களுக்கு பெரும் அன்பு எப்போதும் இருக்கும். அவர்கள் நாய்களை தங்களின் நெருங்கிய நண்பர்களாகவே எப்போதும் பார்ப்பார்கள்.

நாய்
நாய்களை அதன் உரிமையாளர்கள் பலரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே நடத்துவார்கள். குழந்தைகளுக்கு ஈடாக நாய்களைப் பார்த்துக் கொள்வார்கள். செல்ல குழந்தைகளைப் போல நாய்களையும் அதன் உரிமையாளர்கள் அழகுபடுத்திப் பார்ப்பார்கள். ஆனால், அனைத்து வகையான நாய்களும் செல்லமாகவே இருக்கும் எனச் சொல்ல முடியாது. குறிப்பாக சில ஆக்கோரஷமான வகை நாய்கள் நாம் கவனமாகவே கையாள வேண்டும்.

82 வயது முதியவர்
இல்லையென்றால் இழப்புகள் மிகவும் மோசமாக இருக்கும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்து உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை லக்னோவை சேர்ந்த 82 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரை அவரது மகன் வளர்க்கும் நாயால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடித்துக் குதறல்
உத்தரப் பிரதேசம் கைசர்பாக் பகுதியைச் சேர்ந்த 82 வயது முதியவர் சுசீலா திரிபாதி. இவது மகன் அமித். அப்பகுதியில் ஜிம் பயிற்சியாளராக உள்ள இவர், தனது வீட்டில் பிட்புல் மற்றும் லாப்ரடோர் வகை நாய்களை வளர்த்து வருகிறார். பிரவுனி என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த பிட்புல் நாயை மூன்று ஆண்டுகளாக அமித் வளர்த்து வருகிறார். நேற்று காலை 6 மணி அளவில் செல்ல நாய் பிரவுனி, சுசீலா திரிபாதியை கடித்துக் குதறி உள்ளது.

உயிரிழப்பு
பின்னர், கொஞ்ச நேரம் கழித்து ரத்த வெள்ளத்தில் தனது தாயார் இருப்பதைக் கண்டு அமித் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக பல்ராம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அதிக ரத்தம் வெளியேறியதால் பல்ராம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்னரே அவர் உயிரிழந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், சுசீலாவின் உடலில் கழுத்து முதல் வயிறு வரை மொத்தம் 12 இடங்களில் கடுமையான காயங்கள் காணப்பட்டதாகக் கூறப்பட்டு உள்ளது.

அக்கம் பக்கத்தினர்
இந்தச் சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் கூறுகையில், "அதிகாலை 6 மணியளவில், நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. மேலும், சுசீலாவை நாய் தாக்கிய போது, அவர் உதவி கேட்டு அலறினார். நாங்கள் அவர்களது வீட்டிற்கு விரைந்தோம்.. ஆனால் அது உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது. இதனால் என்ன செய்வது என எங்களுக்குத் தெரியவில்லை. அவரது மகன் வீட்டிற்கு வந்த பின்னர் தான், அவரை எங்களால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிந்தது" என்றார்.

பிட்புல்
மற்ற நாய் இனங்கள் உடன் ஒப்பிடுகையில் பிட்புல் நாய் புதிய வகையாகும். 'பிட்புல்' என்ற சொல்லே முதலில் 1927இல் தான் பயன்படுத்தப்பட்டது. இதில் அமெரிக்கன் பிட்புல் டெரியர், அமெரிக்கன் புல்லி, ஸ்டாஃபோர்ட்ஷைர் புல்டெரியர். அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷையர் டெரியர் என 4 வகைகள் உள்ளன. பிட்புல் வகைகள் சற்றே ஆவேசமானது தான். ஆனால், அவை மனிதர்களைத் தாக்குவது மிகவும் அரிதான நிகழ்வு என்கிறார்கள் விலங்கு மருத்துவர்கள்.

என்ன காரணம்
இந்தியாவில் பஞ்சாப், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்ட விரோதமாக நாய்களைச் சண்டைக்கு விடும் முறை இருக்கிறது. இப்படி பிட்புல் நாய்கள் சண்டைக்காக வளர்க்கப்பட்டால், அதன் ரத்தத்தில் ஆக்ரோஷமான பண்புகள் வந்துவிடும். இந்த நாய்கள் இனப்பெருக்கம் செய்யப்பட்டால், அதன் குட்டிகளுக்கும் அதே ஆக்ரோஷமான குணம் இருக்கும். இது மனிதர்கள் அல்லது பிற விலங்குகளால் எந்தவொரு செயலாலும் தூண்டப்படலாம். எனவே, இதுபோன்ற நாய் இனங்களை வாங்கும் முன், அதன் பின்னணியைக் கவனமாக செக் செய்ய வேண்டும் விலங்கு மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications