உ.பியில் மோசமாகும் சட்டம் ஒழுங்கு.. சட்டமன்றம் நோக்கி அகிலேஷ் யாதவ் பேரணி.. யோகிக்கு நெருக்கடி!
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசை விமர்சித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சட்டமன்றத்தை நோக்கி பேரணியை தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக கூறி எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று பேரணியை தொடங்கியுள்ளார்.

தொடரும் குற்றங்கள்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்கிம்புர் கெரி பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்னர் கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியது. அதாவது சகோதரிகளான தலித் சமூகத்தை சேர்ந்த சிறுமிகள் இருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் இந்த சம்பவம் குறித்து தங்களது கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.

பேரணி
இதனையடுத்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக கூறி தற்போது, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சட்டப்பேரவையை நோக்கி பேரணியை தொடங்கியுள்ளார். கட்சியின் 111 எம்எல்ஏக்களும், 9 எம்எல்சிகளும் இந்த பேரணியில் பங்கேற்கின்றனர். காலை 9.45 மணியளவில் விக்ரமாதித்ய மார்க்கில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து இந்த பேரணி தொடங்குகிறது. இதனையடுத்து இந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

எதிர்ப்பு
இந்த பேரணிக்கு அகிலேஷ் யாதவ் தலைமை தாங்குவார் என்று சமாஜவாதி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளரும் தேசிய செயலாளருமான ராஜேந்திர சவுத்ரி கூறியுள்ளார். ஆனால் இந்த பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாநில துணை முதலமைச்சர் மௌரியா, இந்த பேரணிக்கும் மக்கள் நலனுக்கும் தொடர்பில்லை என்றும், மக்கள் நலன்கள் குறித்து விவாதிக்க வேண்டுமெனில் சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

உலகுக்கே முன்னுதாரணம்
முன்னதாக மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து பேசியிருந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "தற்போது உத்தர பிரதேசத்தில் பின்பற்றப்படும் சட்டம் ஒழுங்கு நாட்டிற்கும், உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது. முன்பு போல் இப்போது இல்லை. சட்டம் ஒழுங்கு சீர்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய அரசு ஆட்சியின் போது குற்றவாளிகளை தப்ப விடுவதையே வாடிக்கையாக கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அப்படி இல்லை." என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications