அந்த பெண்ணையே திருமணம் பண்ணு! போக்சோ வழக்கில் கைதானவருக்கு ஜாமீன்! அலகாபாத் நீதிமன்றம் பரபர தீர்ப்பு
லக்னோ: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறையில் உள்ள நபர் பாதிக்கப்பட்டவரை 15 நாட்களுக்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனக்கூறி அலகாபாத் உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் பலாத்காரம் செய்த நபருக்கு ஜாமீன் வழங்குவதற்கு ஆட்சேபனை ஏதும் தெரிவிக்கவில்லை

உத்தரப் பிரதேசம்
இந்தியாவில் பாலியல் குற்றங்கள் அதிகம் நடைபெறும் முதல் 5 மாநிலங்களில் உத்தரப் பிரதேசமும் இருக்கிறது. கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மாநிலம் முழுவதும் 56,083 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாலியல் பலாத்காரம் தொடர்பாக 2,845 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது மட்டுமல்லாது, கடத்தல், தாக்குதல், குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றம் ஆகியவையும் இம்மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்களில் தெரிய வந்திருக்கிறது.

பாலியல் பலாத்காரம்
இந்நிலையில் லக்கிம்பூர் கெரி பகுதியில் கடந்த மார்ச் மாதம் இளைஞர் ஒருவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி கடத்தி சென்றிருக்கிறார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் சிறுமிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து குற்றவாளிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ஜாமீன்
மனுவை விசாரித்த நீதிபதி தினேஷ் குமார் குற்றவாளிக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளார். இந்த தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, குற்றவாளி ஜாமீனில் வெளிவந்தவுடன் அடுத்த 15 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்ய வேண்டும் என்றும், ஒரு மாதத்திற்குள் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். முன்னதாக ஜாமீன் மனு மீதான விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது.

சர்ச்சை
"குற்றவாளி தங்கள் மகளை திருமணம் செய்துகொண்டால் ஜாமீன் வழங்குவதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டோம்" என்று பெற்றோர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக இவ்வாறு பாலியல் பலாத்காரம் செய்த நபர் பாதிக்கப்பட்டவருக்கு திருமணம் செய்து வைப்பதை மகளிர் அமைப்புகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம், பெண்களை சொத்துடமையாக அதாவது ஒரு பொருளாக பார்க்கும் மனப்பான்மை ஏற்பட்டுவிடும் என்றும் அவர்கள் விவரித்துள்ளனர்.
இந்நிலையில் அலகாபாத் நீதிமன்றம் பாதிக்கப்பட்டவரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications