பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச்சூடு: காரில் சென்றபோது மர்ம கும்பல் வெறிச்செயல்
லக்னோ: பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத், காரில் சென்றுகொண்டிருந்தபோது, மர்ம கும்பலால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த சந்திரசேகர் ஆசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் ஆசாத். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு பீம் ஆர்மி என்ற தலித் உரிமைகள் அமைப்பைத் தொடங்கி, இந்த அமைப்பின் தலைவராக சந்திரசேகர் ஆசாத் செயல்பட்டு வருகிறார். ஆசாத் சமாஜ் கட்சி என்ற கட்சியின் தேசிய தலைவராகவும் உள்ளார் சந்திரசேகர் ஆசாத்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களில் சந்திரசேகர் ஆசாத் தலைமையிலான பீம் ஆர்மி அமைப்பு பங்கேற்றது. சந்திரசேகர் ஆசாத் மீது பல்வேறு வழக்குகளும் உள்ளன. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதாகி தற்போது ஜாமினில் வெளியே உள்ளார் ஆசாத்.
இந்நிலையில், பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது இன்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சந்திரசேகர் ஆசாத் இன்று மாலை காரில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவரது கார் மீது மற்றொரு காரில் வந்த நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் சந்திரசேகர் ஆசாத் மீது குண்டு பாய்ந்தது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சந்திரசேகர் ஆசாத் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதுகு, இடுப்பு பகுதிகளில் குண்டு காயங்களுடன் ஆசாத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு காரில் தப்பிச்சென்ற கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சஹரன்பூர் மாவட்ட எஸ்.பி. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications