ஒரு லட்சம் சம்பளம், பல ஏக்கர் நிலம் இருந்தும்.. கவர்மெண்ட் வேலை இல்லாததால் கல்யாணத்தை நிறுத்திய பெண்!
லக்னோ: அரசு வேலையில் இருப்போருக்குத் தான் பெண் கொடுப்பேன் என்று இருப்போர் நமது நாட்டில் ரொம்பவே அதிகம். ஆனால், தனியார்த் துறையில் மாதம் ரூ. 1.2 லட்சம் சம்பளம் வாங்கும் நபருக்குப் பெண் தர யாராவது யோசிப்பார்களா.. ஆனால், இங்கு ரூ. 1.2 லட்சம் சம்பளம், ஏக்கர் கணக்கில் நிலம் இருந்தும் அரசு வேலை இல்லை என்பதால் மணப்பெண் திருமணத்தைப் பாதியிலேயே நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.
நமது நாட்டில் அரசு வேலைக்கு எப்போதும் தனி மதிப்பும் மரியாதையும் இருக்கும். அரசு வேலையில் இருப்போருக்குச் சம்பளம் குறைவு என்றாலும் வேலையில் ஸ்திரத்தன்மை இருக்கும்.

வேலைக்குப் பாதுகாப்பு இருக்கும் என்பதால் பலரும் அரசு வேலையில் இருப்போருக்கே பெண் கொடுக்க முன்வருவார்கள். இதற்கிடையே நமது நாட்டில் மாதம் ரூ. 1.2 லட்சம் சம்பளம் வாங்கிய நபருக்கும் கூட அரசு வேலை இல்லாததால் திருமணம் நின்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.
நிறுத்திய பெண்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவருக்குக் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்யாணத்தின் போது மாலை மாற்றும் சடங்கும் கூட முடிந்துவிட்டது. அப்போது தான் அந்த பெண்ணுக்குத் தன்னை திருமணம் செய்து கொள்ளப் போகும் நபர் அரசு வேலை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அவர் தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ. 1.5 லட்சம் சம்பளத்தில் வேலையில் இருந்த போதிலும், அரசு வேலை இல்லை எனச் சொல்லி அந்த பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூகாபாத் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண் திருமணத்தை நிறுத்தியதால், திருமண ஊர்வலம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
ஊதியம்: சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூரைச் சேர்ந்த மணமகன் தனியார் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணிபுரிகிறார். அவருக்கு மாதம் ரூ. 1.2 லட்சம் சம்பளம் கிடைக்கிறது. மேலும், அவருக்குச் சொந்தமாக 6 வீட்டு மனைகள் மற்றும் 12.5 ஏக்கர் நிலமும் இருக்கிறது. இவை எல்லாம் இருந்தாலும் கூட அரசு வேலை இல்லை என்று சொல்லி அவரை திருமணம் செய்ய அந்த பெண் மறுத்துவிட்டார்.
என்ன நடந்தது: திருமணத்திற்கு முந்தைய அரசு அவர்களின் குடும்ப வழக்கப்படி சடங்குகள் நடந்துள்ளன. அவை முடியவே நள்ளிரவைத் தாண்டிவிட்டது. அப்போது இரவு ஒன்றரை மணி அளவில் தான், மணமகனுக்கு அரசு வேலை இல்லை என்பது அந்த பெண்ணுக்குத் தெரிய வந்துள்ளது. இது தெரிந்த உடனேயே அந்த பெண் திருமணம் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார்.
பெண்ணின் பெற்றோரும் மாப்பிள்ளை வீட்டாரும் அந்த பெண்ணை சமாதானம் செய்ய முயன்றனர். இருப்பினும், அந்த பெண் தனது முடிவில் உறுதியாக இருந்துவிட்டார். அரசு வேலை இல்லாததால் நிச்சயம் திருமணம் செய்ய முடியாது எனச் சொல்லிவிட்டார்.
சமாதான முயற்சி தோல்வி: நள்ளிரவில் திடீரென திருமணம் செய்ய முடியாது என்று அந்த பெண் சொன்னதால் இரு தரப்பும் அதிர்ந்து போனார்கள். பெண்ணை சமாதானம் செய்ய ஒரு கட்டத்தில் மாப்பிள்ளை தனது சேலரி ஸ்லிப்பை கூட கொடுத்துள்ளார். அதில் அவர் மாதம் ரூ. 1.2 லட்சம் ஊதியம் பெறுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த பெண் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் திருமணம் நின்றுள்ளது. திருமணத்திற்கு ஆன செலவை இரு வீட்டாரும் பகிர்ந்து கொள்வதாக முடிவு செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாகப் போலீசில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நம்ம ஊரில் அரசு வேலைக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications