புதுப்பொலிவு பெறும் உத்தரப் பிரதேச சாலைகள்.. ரூ.500 கோடி நிதி ஒதுக்க மாநில அமைச்சரவை ஒப்புதல்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சாலை கட்டமைப்புகளை மேம்படுத்த யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ரூ.500 கோடியை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்திருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக சாலை போக்குவரத்தை மேம்படுத்த ரூ.500 கோடியை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்திருக்கிறார்.

அதாவது அனைத்து நகரங்களிலும் சர்வதேச தரத்தில் சாலைகள் அமைக்க, முதல்வர் பசுமை சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காகதான் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் அதிகரித்து வரும் நகரமயமாக்கல் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதை சரி செய்ய ஏற்கெனவே பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாகதான் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
முதற்கட்டமாக 17 மாநகராட்சிகளில் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 10-45 கி.மீ வரையிலான அனைத்து சாலைகளும் அதிநவீன சாலைகளாக மேம்படுத்தப்படும். இரண்டாம் கட்டமாக, 200 நகராட்சிகள் மற்றும் 545 நகர பஞ்சாயத்துகளின் சாலைகள் மேம்படுத்தப்படும். இந்த பணிகளை கண்காணிக்கும் பணி மாநில அரசு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு முகமையிடம் ஒப்படைக்கப்படும். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் நகர்ப்புறங்களில் அமைந்துள்ள கலாச்சார, புராண, மத மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தளங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் அழகுபடுத்துவதற்கும் 'வந்தன் யோஜனா' திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
இந்த திட்டங்கள் குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், "இது உத்தரப் பிரதேசத்தின் உள்கட்டமைப்பையே தலைகீழாக மாற்றிவிடும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications